சுமார் 2,000 வீடுகளை அமைக்க மூன்று பகுதிகளில் ஏலக்குத்தகை

சுமார் 2,000 வீடுகளை அமைக்க மூன்று பகுதிகளில் ஏலக்குத்தகை

2 mins read
4351c4ed-f0f6-476a-8976-ef0b15cf5b30
டெய்ரி ஃபார்ம் வாக் பகுதி. - படம்: சாவ்பாவ்

வீடு கட்டுவதற்காக நகர மறுசீரமைப்பு ஆணையம் மூன்று பகுதிகளை ஏலக்குத்தகைக்கு விட்டுள்ளது.

இவ்வாண்டுக்கான அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் டெய்ரி ஃபார்ம் வாக், தெங்கா கார்டன் அவென்யூ, பே‌‌ஷார் ரோடு ஆகிய இடங்கள் வீடு கட்ட ஏலக்குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த மூன்று இடங்களுக்கான ஏலக்குத்தகைகளும் 99 ஆண்டுகளுக்கானவை. அவற்றில் 1,915 வீடுகளைக் கட்ட முடியும்.

டெய்ரி ஃபார்ம் வாக், தெங்கா கார்டன் அவென்யூ ஆகியவை உறுதிசெய்யப்பட்ட பகுதிகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பே‌ஷார் ரோடு காத்திருப்புப் பகுதிகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

உறுதிசெய்யப்பட்ட பகுதிகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவை நிலவரம் என்னவாக இருந்தாலும் திட்டமிட்டபடி ஏலக்குத்தகைக்கு விடப்படும். காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் பகுதிகள் சொத்து நிறுவனம் ஒன்று அரசாங்கம் எதிர்பார்க்கும் தொகையை வழங்கி கட்டடம் கட்ட முன்வந்தால் மட்டுமே ஏலக்குத்தகைக்கு விடப்படும்.

டெய்ரி ஃபார்ம் வாக், பே‌ஷார் ரோடு பகுதிகள் வீடுகளை மட்டுமே கட்ட ஒதுக்கப்பட்டுள்ளன. தெங்கா கார்டன் அவென்யூ, வீடுகள் மட்டுமின்றி வர்த்தகப் பயன்பாட்டுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கான ஏலக்குத்தகைகளின் மதிப்பு, அவ்வட்டாரங்களில் முன்பு விடப்பட்ட ஏலக்குத்தகைகளின் மதிப்பைவிட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொத்து வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர். அரசாங்கம் ஏலக்குத்தகைக்கு விடும் நிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது, சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள் சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

கட்டுமானப் பணிகளுக்கான செலவு, வட்டி விகிதம் அதிகமாக இருப்பது அதற்கான காரணங்களில் அடங்கும்.

டெய்ரி ஃபார்ம் வாக் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள 21,881.8 சதுர மீட்டர் இடத்தில் 540 வீடுகளை அமைக்கலாம். தெங்கா கார்டன் அவென்யூவில் ஒதுக்கப்பட்டுள்ள 25,456 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியில் சுமார் 860 வீடுகளைக் கட்ட முடியும்.

பே‌ஷார் ரோட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 10,493.9 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியில் 515 வீடுகளை அமைக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்