சிங்கப்பூரின் அரசாங்க அமைப்புகள் அனுப்பும் குறுந்தகவல்களை (எஸ்எம்எஸ்) எளிதில் அடையாளம் காண ஜூலை 1 முதல் புதிய அம்சம் அறிமுகம் காண்கிறது.
அரசாங்க அமைப்புகள் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலிலும் ‘gov.sg’ என்னும் ஒற்றை அடையாளம் இருக்கும். அரசாங்கத்தின் அதிகாரபூர்வக் குறுந்தகவல் என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிக்க அந்த அம்சம் ஜூலை 1 முதல் புதிதாகச் சேர்க்கப்படுகிறது.
எல்லா அரசாங்க அமைப்புகளுக்கும் அந்த அடையாளம் பொருந்தும்.
தற்போது வரை சுகாதார அமைச்சு அனுப்பும் குறுந்தகவல்களில் ‘MOH’ என்றும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் அனுப்பும் தகவல்களில் ‘Iras’ என்றும் தனித்தனி அடையாளங்கள் இடம்பெற்று வருகின்றன.
‘gov.sg’ என்னும் பொது அடையாளம் தவிர, ஒவ்வொரு தகவலும் அதனை அனுப்பிய அரசாங்க அமைப்பின் முழுப் பெயருடன் தொடங்கும்.
தகவலின் இறுதியில், ‘சிங்கப்பூர் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட தானியக்கத் தகவல் இது’ என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டு இருக்கும்.
அந்தத் தகவலுக்கு, பதில் அனுப்பத் தேவையில்லை என்பதைக் குறிக்க அவ்வாறு தெரிவிக்கப்படும்.
ஜூன் 18 முதல் இருவார காலத்திற்கு அரசாங்க அமைப்புகள் படிப்படியாக gov.sg என்னும் அடையாளத்தை அவற்றின் குறுந்தகவல்களில் சேர்த்து அனுப்பத் தொடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை 1 முதல் எல்லா அரசாங்க குறுந்தகவல்களும் அந்த அடையாளத்துடன் அனுப்பப்படும்.
இருப்பினும், விதிவிலக்காக தற்காப்பு மற்றும் உள்துறை அமைச்சுகளின் குறுந்தகவல்களில் மட்டும் வேறுபட்ட அடையாளம் இருக்கும். தேசிய சேவை தொடர்பாகவும் அவசரச் சேவைகள் தொடர்பாகவும் அந்த அமைச்சுகள் அனுப்பும் தகவல்கள் தனிப்பட்ட அடையாளத்தைத் தாங்கி வரும்.
‘ஓப்பன் கவர்மெண்ட் புராடக்ட்ஸ்’ (ஓஜிபி) என்னும் அரசாங்கத் தொழில்நுட்ப முகவையின் சுயேச்சைப் பிரிவு இந்தப் புதிய அம்சத்தை உருவாக்கி உள்ளது.
அரசாங்க அதிகாரிபோல ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்படும் மோசடிகளில் சிக்கிவிடாமல் பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது இந்நடவடிக்கை.
அண்மைய ஆண்டுகளில் குறுந்தகவல் வழி நடைபெறும் மோசடிகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
2022ஆம் ஆண்டு, மின்னஞ்சலிலும் குறுந்தகவலிலும் இடம்பெற்ற சொடுக்கக்கூடிய இணைப்புகளை சிங்கப்பூரில் உள்ள எல்லா வங்கிகளும் நீக்கின. இணைய வங்கி ஊடுருவல் மூலம் அரங்கேறும் மோசடிகளைத் தடுக்க அவ்வாறு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு, ‘சிங்கப்பூர் குறுந்தகவல் அனுப்புவோர் அடையாளப் பதிவக’த்தில் பதிந்துகொள்ளுமாறு எல்லா அமைப்புகளையும் தொடர்பு தகவல் ஊடக மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டது. பதிவு செய்த பின்னர் அனுப்பும் குறுந்தகவல்களில் எண்ணெழுத்துடன் (alphanumeric) கூடிய அடையாளம் இருக்க வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியது.
இவ்வாண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, டிபிஎஸ் வங்கி போன்ற நிதி நிறுவனங்கள், லஸாடா போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள் போன்றவை உள்ளிட்ட 4,000க்கும் மேற்பட்ட வர்த்தக அமைப்புகள் அதில் பதிவு செய்துகொண்டதாக ஆணையம் தெரிவித்து உள்ளது.