நெருக்கடிகள் மற்றும் இடையூறுகளில் இருந்து வர்த்தகங்கள் மீண்டு வருவதை உறுதிசெய்வதற்கான செயல்முறைகளை மேம்படுத்த சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து பணியாற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரு நாடுகளும் தங்களது விநியோகத் தொடர் மீள்திறனில் பொது நலன் அடிப்படையில் ஒத்துழைப்பு பணிக்குழு ஒன்றை உருவாக்குவதும் அந்த மேம்பாட்டு நடவடிக்கைகளில் அடங்கும்.
வருடாந்திர இரண்டாவது அமைச்சர்நிலை கலந்துரையாடலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கலந்துரையாடல் வியாழக்கிழமை (ஜூன் 13) நடைபெற்றது.
அந்தப் புதிய பணிக்குழுவின் தலைமைப் பொறுப்பை சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சும் மலேசியாவின் முதலீடு, வர்த்தக, தொழில் அமைச்சும் பகிர்ந்துகொள்ளும்.
இருதரப்பு பொருளியல் ஒத்துழைப்பைப் பலப்படுத்தவும் மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் போன்ற புதிய அம்சங்களில் இருநாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புகளை ஆராயவும் ‘வருடாந்திர அமைச்சர்நிலைக் கலந்துரையாடல்’ (ஏஎம்டி) என்னும் ஏற்பாடு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
விநியோகத் தொடர்பு பணிக்குழு என்பது கொவிட்-19 பெருந்தொற்று சமாளிப்பின் ஒரு பகுதியாகும். இடையூறுகளைச் சமாளிப்பதற்குத் தோதான அணுகுமுறைக்கான அவசியத்தை பெருந்தொற்று உணர்த்தியது.
இரு நாட்டுப் பொருளியல்களும் ஒன்றோடொன்று எவ்வாறு இணைந்துள்ளன என்பதையும் இருநாட்டு உறவுகளின் பல்வேறு அம்சங்களின் முக்கியத்துவத்தையும் அவற்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் பெருந்தொற்று வெளிப்படுத்தியது.

