மகனைச் சங்கிலியால் கட்டி தாக்கிய ஆடவருக்கு ஈராண்டு சிறை

மகனைச் சங்கிலியால் கட்டி தாக்கிய ஆடவருக்கு ஈராண்டு சிறை

1 mins read
f8c3251e-71d5-424e-9ba7-957cf97a7156
படம். - தமிழ் முரசு

ஆடவர் ஒருவர் தமது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற பின் தன்னுடன் இருக்கும் மகனை முன்னாள் மனைவியுடன் பேசக்கூடாது என தடை போட்டிருந்தார்.

அதை மீறி மகன் தமது முன்னாள் மனைவியுடன் பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த ஆடவர், தன் மகனை முகத்தில் அறைந்ததில் மகன் காதில் துளை விழுந்தது.

அதன் பின்னரும் தமது தாக்குதலை நிறுத்தாத அந்த ஆடவர் ரப்பர் குழாய் மூலம் மகனைத் தொடர்ந்து தாக்கியதில் மகனுக்கு நிறைய சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.

மற்ற சமயங்களில் அந்த ஆடவர், தன் மகனை சங்கிலியால் பிணைத்து அந்தச் சங்கிலியை கழிவறையில் இருக்கும் இரும்புக் கம்பியுடன் சேர்த்துப் பூட்டு போட்டுப் பூட்டி வைத்தார்.

தற்பொழுது 13 வயதாகும் தமது மகன் பொய் கூறினாலோ, வீட்டுப் பாடம் செய்யத் தவறினாலோ அல்லது முன்னாள் மனைவியுடன் பேசினாலோ மகனை இவ்வாறு பூட்டி வைப்பது வழக்கம் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 14ஆம் தேதி) அன்று 53 வயது நிரம்பிய அந்த தனியார் துறை ஓட்டுநர் சிறுவனைக் கொடுமைப்படுத்திய மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவனின் அடையாளத்தை காக்க அவனது விவரங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அந்த ஆடவரின் விவாகரத்துக்குப் பின் தம்பதியரின் மகன் ஆடவரின் பராமரிப்பில் விடப்பட்டதாக அரசு துணை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்