சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ‘டிக்கி’ (Tiki) எனும் குறுகிய வீடியோ செயலி ஒன்று, தனது வர்த்தக முத்திரையைப் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தது. ஆனால் அந்தச் சின்னம், தங்களுடையதுபோல உள்ளது என்று கூறி அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ‘டிக்டாக்’ செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் தோல்வியடைந்துள்ளது.
வர்த்தகச் சின்னம் ஒரே மாதிரி இருக்கிறது என்பதை நிரூபிக்க பைட்டான்ஸ் நிறுவனத்தால் முடியவில்லை என்று சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து அலுவலகம் (இபோஸ்) வெளியிட்டுள்ள சட்டப்பூர்வ முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் செயல்படும் டோல் டெக்னாலஜி, 2021ஆம் ஆண்டில் வர்த்தகச் சின்னத்தைப் பதிவு செய்ய முதல் முறையாக விண்ணப்பித்திருந்தது. இதையறிந்த பைட்டான்ஸ், 2021 டிசம்பர் 23, 2022 ஜனவரி 18 ஆகிய இரண்டு தேதிகளில் தமது எதிர்ப்பை இரண்டு முறை பதிவு செய்தது.
டோல் டெக்னலாஜியின் ‘டிக்கி’ செயலி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்டது.
இது, குறுகிய காணொளிகளை உருவாக்கி, பார்க்கவும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து வந்த பல்வேறு சவால்களால் 2023 ஜூன் 27ஆம் தேதி அந்நிறுவனம் மூடப்பட்டது.
இந்த நிலையில் தமது முடிவு குறித்து விளக்கிய திரு லிம், பார்ப்பதற்கும் கருத்தொற்றுமைக்கும் டிக்கி, டிக்டாக் செயலிகளின் வர்த்தகச் சின்னம் வேறுபட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
‘டிக்டாக்’கின் சின்னம் இசையைக் குறிப்பது போல் உள்ளது. ஆனால் ‘டிக்’ செயலியில் ‘T’ என்ற எழுத்து வடிவமாக எழுதப்பட்டுள்ளது.

