உலக அளவில் தானியக்கமும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பள்ளிகளில் புத்தாக்கம், வடிவமைப்பு ஆகியவற்றைக் கற்றுத்தர சிங்கப்பூர் முதன் முதலாக தேசிய அளவில் ஏற்படுத்தியுள்ள வடிவமைப்பு பற்றிய கல்விக் குழு புதிய உத்தி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
இதன் இலக்கு என்னவென்றால், எதிர்காலப் பொருளியல் செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், மூப்படையும் மக்கள்தொகை ஆகியவற்றை சார்ந்து இருக்குமென்பதால், அவற்றுக்கேற்றவாறு ஊழியரணியை தயார்ப்படுத்துவது.
இதன் தொடர்பில் வியாழக்கிழமை (ஜூன் 13ஆம் தேதி) அன்று வர்த்தக, தொழில் அமைச்சு அமைத்த வடிவமைப்பு கல்வி ஆலோசனைக் குழு, எதிர்காலப் பள்ளி வடிவமைப்பு பெருந்திட்டத்தை அறிவித்தது.
இந்த பெருந்திட்டத்தின்படி, தொடக்கப் பள்ளியிலிருந்து உயர்கல்விவரை வடிவமைப்பு பற்றிய சிந்தனையை அனைத்து மாணவர்களின் அன்றாடப் பாடத் திட்டத்தின் முக்கியக் கூறாகச் சேர்க்கப்பட உள்ளது.
இதில் கட்டடக் கலை, பொருள் மற்றும் நவீன ஆடை, அணிகலன் வடிவமைப்பு ஆகிய கல்வித் திட்டங்களில் இதுவரை கடைப்பிடித்து வந்த மரபு சார்ந்த வடிவமைப்பைத் தாண்டியிருக்கும்.
“வடிவமைப்பு சிந்தனை என்பது ஒருவகையான பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் ஒரு செயல்திறன். இது ஒரு மாற்று சிந்தனை இல்லை, மாறாக, துணைச் சிந்தனை முறை,” என்று குழுவின் தலைவர் லோ சியாவ் ஹுவெய் தெரிவித்தார்.
எதிர்கால வடிவமைப்புப் பள்ளித் திட்டம் பல உயர்கல்விக் கழகங்களைக் கொண்டிருக்கும். அவை தங்கள் தரம், பலம், மரபுக்கேற்ப தனித்துவம் வாய்ந்த பாடத் திட்டங்களை வழங்கும்,” என்று டிசைன் சிங்கப்பூர் கவுன்சில் தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

