சிங்கப்பூர் முழுவதும் சோதனை; 71 பேர் கைது

சிங்கப்பூர் முழுவதும் சோதனை; 71 பேர் கைது

2 mins read
0aba47d6-724d-4af0-bc38-163f0ccc629b
பிடோக் நார்த் அவென்யு 4ல் உள்ள வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள். - படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு

சிங்கப்பூர் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) , சிங்கப்பூர் முழுவதும் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 71 சந்தேக நபர்களைச் சுற்றி வளைத்து கைது செய்துள்ளது.

ஜூன் மாதம் 10ஆம் தேதியிலிருந்து 14 வரை சோதனை நடைபெற்றது.

இதில், மொத்தம் 555 கிராம் ஐஸ், 406 கிராம் ஹெராயின், 300 எரிமின்-5 மாத்திரைகள், ஒரு கிராம் கஞ்சா, இரண்டு போத்தல் போதை கலந்த பானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் சந்தை மதிப்பு 115,000 வெள்ளியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் ஆக இளையவர் 15 வயது உயர்நிலைப் பள்ளி மாணவி ஆவார்.

போதைப் பொருளைப் பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்று சிஎன்பி வெள்ளிக் கிழமை (மே 14) அன்று ஊடகத்திற்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அங் மோ கியோ, பிடோக், புக்கிட் பாத்தோக், தோ பாயோ உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது.

ஜூன் 12ஆம் தேதி போதைப் பொருள் நடவடிக்கைகளுக்காக புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 32ல் உள்ள வீட்டை சோதனையிட்டு சிங்கப்பூரர்களான மூவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் 41 வயது ஆண். இரு பெண்களில் அவரது 33 வயது மனைவியும் 44 வயது சகோதரியும் அடங்குவர்.

அந்த வீட்டின் 41 வயது ஆணின் படுக்கையறையிலிருந்து 41 கிராம் ஐஸ், 44 வயது பெண்ணின் படுக்கையறையிலிருந்து 37 கிராம் ஐஸ் கைப்பற்றப்பட்டது.

இதற்கு முன்னதாக சிஎன்பி அதிகாரிகள், புளோக்கின் தரைத் தளத்தில் உள்ள குப்பைத் தொட்டிக்கு அதே சந்தேக நபரை அழைத்துச் சென்று அதிலிருந்து 423 கிராம் ஐஸ், 300 எரிமின்-5 மாத்திரைகளைக் கண்டுபிடித்து மீட்டனர்.

அதே நாள் காலை பிடோக் நார்த் அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டு அங்கிருந்த சிங்கப்பூரரான 44 வயது பெண்ணைக் கைது செய்தனர்.

அந்த வீட்டிலிருந்து 400 கிராம் ஹெராயின், 12 கிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்