பதினொரு தனியார் வீடுகளை அனுமதியற்ற ஊழியர் தங்குமிடங்களாகப் பயன்படுத்திய 72 வயது ஆடவருக்கு $600,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் 23 வெளிநாட்டினர் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இதன் தொடர்பில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்திய சோதனையில் டான் ஹோக் கெங் என்பவர் இந்த வீடுகளில் பல அறைகளை உருவாக்கினார் என்பது தெரியவந்தது. இதில் ஊழியர்களை அவர் சுகாதாரமற்ற சூழலில் தங்கவைத்தது தெரியவந்தது.
இதில் கேலாங்கில் உள்ள ஒரு வீட்டில் மனிதவள அமைச்சு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அவ்வீட்டின் சமையலறைச் சுவர்கள், கழிவறைகள் ஆகியவற்றில் மோசமான கறைகள் இருப்பது தெரிந்தது.
மேலும் அருகிலுள்ள ஒரு வீட்டுப் படுக்கையறையில் மூட்டைப்பூச்சி கறை படிந்திருப்பதும் தெரிந்தது.
இதை அடுத்து மே மாதம் 30ஆம் தேதி டான் மீதான மூன்று குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பாகி அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு எதிரான மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இது குறித்து நகர மறுசீரமைப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) அன்று வெளியிட்ட அறிக்கையில், டானின் வீடுகளில் குடியிருப்புகளில் இருக்க அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட மிக அதிகமானவர்கள் தங்க வைக்கப்பட்டனர் என்று கூறப்பட்டிருந்தது.

