சிங்கப்பூரர்கள் அதிக காலம் வாழும் நிலை, மக்கள்தொகை வேகமாக மூப்படையும் நிலை ஏற்படுவதால் வேலை பார்ப்போர் ஒரு தலைமுறைக்கு மேற்பட்ட முதியவர்களை கவனித்துக்கொள்ளும் சவாலான நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் நிதி நிலையை பொறுத்தவரை, சிங்கப்பூரின் தேசிய ஆண்டு வருமானத் திட்டம், மருத்துவத் திட்டங்கள் ஆகியவை ஓய்வுபெறுவதற்கான ஓர் அடித்தளத்தை அமைத்துத் தரும். இதனுடன் சேர்ந்து தனியார்மய துணை ஆண்டு வருமான திட்டங்கள் போன்றவற்றுடன் வீட்டுக் குத்தகையை திரும்பப் பெற்றுக்கொள்ளும் திட்டம் ஆகியவை உதவும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலக அளவில், மூப்படையும் சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில் நீக்குப்போக்கான காப்புறுதித் திட்டங்கள் மூலம் மூப்படையும் சமுதாயத்துக்கு நீண்ட நாள் பராமரிப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் மூப்படைவது அதிகரித்து வருகிறது. எதிர்வரும் 2050ஆம் ஆண்டில் 65 வயது, அதற்கும் மேற்பட்டோர் ஆகியோரை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகளாக ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா விளங்கும் என ஐநா அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதில் சிங்கப்பூர் ஒன்பதாவது இடத்தில் இருக்கும். அப்பொழுது சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 34.2 விழுக்காட்டினர் மூப்படைந்த வயதுப் பிரிவில் இருப்பர். முதல் நிலையில் இருக்கும் ஹாங்காங்கில் 40.6%, இரண்டாம் நிலையில் இருக்கும் தென்கொரியாவில் 39.4%, மூன்றாம் நிலையில் இருக்கும் ஜப்பானில் 37.5 விழுக்காட்டினர் இந்த மூப்படைந்தோர் பிரிவில் இருப்பர் என்று அந்த அறிக்கை விளக்குகிறது.

