சிங்கப்பூர் முழுவதிலுமுள்ள வெவ்வேறு தொகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அடுத்த சில மாதங்களில் இயன்றவரை அதிக எண்ணிக்கையிலான சிங்கப்பூரர்களைச் சந்திக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடக்கமாக, ஜூன் 15ஆம் தேதி தெம்பனிசில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்குள் இத்தகைய சந்திப்புகளை நிறைவுசெய்ய அவர் விரும்புகிறாரா என்று பிரதமரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திரு வோங், இதற்கும் பொதுத் தேர்தலுக்கும் தொடர்பில்லை என்று வலியுறுத்தினார்.
“பதவியேற்ற பிறகு இப்போதுதான் வெளி நாடுகளுக்கான அறிமுகப் பயணங்களைத் தொடங்கியுள்ளேன் என்பதை அனைவரும் அறிவீர்கள். அதேபோல், சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்வதை முக்கியமாகக் கருதுகிறேன்,” என்று பிரதமர் கூறினார்.
தெம்பனிஸ் கம்யூனிட்டி பிளாசாவில் நடைபெற்ற கற்றல் விழாவுக்கிடையே செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரர்களுடன் தொடர்புகொண்டு, அவர்கள் கருத்துகளை நேரடியாகச் செவிமடுக்க விரும்புகிறேன். அதனால் இந்தச் சந்திப்புகளின்போது இயன்றவரை அதிகமான சிங்கப்பூரர்களைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.
“அரசாங்கக் கொள்கைகள் பற்றிய கருத்துகள் அல்லது உங்கள் அக்கம்பக்கத்தை மேம்படுத்துவதற்குரிய யோசனைகள் இருந்தால் அவற்றை உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்,” என்று திரு வோங் சொன்னார்.
“உங்களுக்கு ஆதரவு வழங்கி, ஒத்துழைத்து, இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.
“சிங்கப்பூரர்களுடன் தொடர்புகொள்வதற்கான தளங்கள் அரசாங்கத்தில் ஏற்கெனவே இருந்தாலும் ஒரு புதிய பிரதமராக என் தொகுதியில் மட்டுமன்றி சிங்கப்பூர் முழுவதிலுமுள்ளவர்களைச் சந்தித்து நேரம் செலவிடுவதை முக்கியமாகக் கருதுகிறேன்,” என்றார் அவர்.
இத்தகைய தொகுதிச் சந்திப்புகளுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், அதுகுறித்து இன்னும் திட்டமிடுவதாகக் கூறினார்.