தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய தினப் படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுடன் கலந்துரையாடிய அதிபர் தர்மன்

2 mins read
cd44a310-5d51-44a1-b334-9c9cbf485a13
அதிபர், அவரது துணைவியார் இருவருடனும் படம் எடுத்துக்கொண்ட மாணவர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்
multi-img1 of 2

தேசிய தினத் தொகுப்புக்காக, முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களை உணர்த்தும் கலைப்படைப்புகளை உருவாக்கிய சிறப்புத் தேவைகளுடைய கலைஞர்கள், அவர்களது குடும்பத்தினர் பராமரிப்பாளர்களுடன் கலந்துரையாடினார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.

ஜூன் 16ஆம் தேதியன்று சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிபரும் அதிபரின் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகியும் பங்கேற்று அனைவருடனும் கலந்துரையாடினர்.

தேசிய தின அணிவகுப்பு செயற்குழு, ‘எஸ்ஜி எனேபல்’ எனும் இயலாதோருக்கான நல்வாழ்வு நிலையத்துடன் இணைந்து கடந்த ஐந்தாண்டுகளாக சிறப்புத் தேவைகளுடைய மாணவர்களை ஒன்றிணைத்து தேசிய தினத் தொகுப்புக்கான கலைப்படைப்புகளை வடிவமைத்து வருகிறது.

இவ்வாண்டு அதில் பங்குபெற்ற மாணவர்கள் தங்களது படைப்புகளை அதிபரிடம் காட்டி விளக்கினர். ஒவ்வொரு மாணவரிடமும் அவரது படைப்பு குறித்து கேட்டறிந்த அதிபர் தர்மன், அவர்களுக்குத் தம் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மாணவி ஒருவரிடம் அவரது படைப்பு குறித்து கேட்டறிந்த அதிபரும் அவரின் துணைவியாரும்.
மாணவி ஒருவரிடம் அவரது படைப்பு குறித்து கேட்டறிந்த அதிபரும் அவரின் துணைவியாரும். - படம்: லாவண்யா வீரராகவன்.

அவர்களது படைப்பின் நேர்த்தி குறித்தும் கருத்துருவாக்கம் குறித்தும் பயன்படுத்திய கலைப் பொருள்கள், நிறங்கள் குறித்தும் அதிபர் குறிப்பிட்டுப் பாராட்டியது மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மொத்தம் 22 சிறப்புக் கல்விப் பள்ளிகளிலிருந்து 8 முதல் 18 வயதுடைய 40 மாணவர்கள் பங்கேற்று முழுமைத் தற்காப்பு குறித்த தங்கள் பார்வையையும், சிங்கப்பூரர்களை வரையறுக்கும் அவர்களது பலம், கனவுகள் உள்ளிட்டவற்றையும் பறைசாற்றும் வண்ணம் கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

இம்மாணவர்களின் கலைப்படைப்புகள் தொகுக்கப்பட்டு, தேசிய தினப் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்புப் பைகளில் அச்சிடப்பட்டுள்ளது அம்மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்தது.

இந்த முயற்சி சிறப்புத் தேவையுடையவர்களின் திறன்களைக் கொண்டாடுவதுடன், ஒவ்வொரு தனிமனிதனும் எவ்விதப் பாகுபாடுமின்றி சமூகத்தின் ஒருங்கிணைந்த உறுப்பினராக மதிக்கப்பட வேண்டுமென்கிற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது.

தங்கள் பள்ளி மாணவர்கள் இருவரது கலைப்படைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது பெருமையாக இருப்பதாகச் சொன்ன காத்தோங் பள்ளியின் அழகியல் துறைத்தலைவர் சியாமளா ரிசியா சங்கர், இது ஒருங்கிணைந்த சமூகத்தை நோக்கிய பயணத்தின் முக்கியப் பகுதி என்றும் குறிப்பிட்டார்.

தமக்கு விருப்பமான ராணுவப் படை வீரர்கள் அணிவகுப்பு, விமானம் ஆகியவற்றை வரைந்துள்ளதும், அதனை அனைவரும் பாராட்டுவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறிய மாணவர் ஹாரித், 17, எதிர்காலத்தில் தானும் ஒரு ராணுவ வீரராக விரும்புவதாகவும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்