தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரட்டைப் பார்வைக் குறைபாடு சிங்கப்பூரில் அதிகரிப்பு

2 mins read
3af78e09-f4da-4ace-9c8d-3bb192df7ba8
காரணம் கண்டறியப்படாத இரட்டைப் பார்வைக் குறைபாடு ஏற்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ‘டிப்லோபியா’ என்னும் இரட்டைப் பார்வைக் குறைபாடு சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

அந்தக் குறைபாட்டுடன் சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையத்தை நாடுவோரின் எண்ணிக்கை, உலக நிலவரத்தோடு ஒப்பிடுகையில் அதிகம் என்று மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் யுவோன் லிங் தெரிவித்து உள்ளார்.

இரட்டைப் பார்வைக் கோளாறு என்பது, பார்க்கக்கூடிய ஒரு பொருள் இரண்டாகத் தெரிவதாகும். ஒரு கண் மட்டும் திறந்திருக்கும்போதோ அல்லது இரு கண்களும் திறந்திருக்கும்போதோ அது நிகழலாம்.

இரு கண்களுக்கும் இரட்டையாகத் தெரிவது ‘பைனாகுலர் டிப்லோபியா’ என்று அழைக்கப்படுகிறது. ஏதாவது ஒரு கண்ணை மூடினாலே அந்த இரட்டைத் தோற்றம் மறைந்து வழக்கநிலைக்கு வந்துவிடும் என்றார் டாக்டர் லிங்.

இந்தக் குறைபாடு தொடர்பான ஆய்வு ஒன்றை சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையம் இவ்வாண்டு தொடக்கத்தில் நடத்தியது.

2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளில் ‘பைனாகுலர் டிப்லோபியா’ குறைபாட்டுடன் 234 நோயாளிகள் சிகிச்சையை நாடியது ஆய்வில் தெரிய வந்தது.

அதற்கு முந்திய, 2001 முதல் 2010 வரையிலான பத்தாண்டுகளில் அந்தக் குறைபாட்டுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளிகளைக் காட்டிலும் 15 நோயாளிகள் அதிகம் என்பதையும் ஆய்வு கண்டறிந்தது.

அதேபோல, அண்மைய ஆண்டுகளான 2021 முதல் 2023 வரை 76 நோயாளிகள் ‘பைனாகுலர் டிப்லோபியா’ குறைபாட்டுக்குச் சிகிச்சை பெற வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெரியவர்கள்.

நரம்புக் கோளாறு காரணமாகவோ நெடுநேரம் திரைகளை, குறிப்பாக கைப்பேசித் திரைகளைக் காண்பதாலோ அந்தக் குறைபாடு ஏற்படக்கூடும் என்று அந்தப் பெண் மருத்துவர் கூறினார்.

“ஒரு கண்ணுக்கு மட்டும் இரட்டைப் பார்வை தெரியும் குறைபாடு ‘மோனோகுலர் டிப்லோபியா’ என்று அழைக்கப்படுகிறது.

“அந்தக் குறைபாடு ஏற்படின் உங்களுக்குத் தோதான மருத்துவரை நாடலாம். கண்ணாடியை மாற்றுவது அதற்குத் தீர்வாக இருக்கலாம். அல்லது கண்புரை நோயின் ஆரம்பக்கட்டமாக இருக்கலாம். அது அவசரமற்ற நிலை,” என்றார் அவர்.

2019ஆம் ஆண்டு திருவாட்டி ஜேவியென் சிம், 38, என்னும் மாது ‘பைனாகுலர் டிப்லோபியா’ குறைபாட்டால் பாதிக்கப்பட்டார்.

டாக்டர் லிங்கின் நோயாளியான அவர், தேவாலயத்தில் திருமணச் சடங்கில் ஈடுபட்டபோது அவர் ஏற்றவேண்டிய மெழுகுவத்திகள் அவருக்கு இரட்டையாகத் தெரிந்தன. அதனால், அவரது கைகளைப் பிடித்து மெழுகுவத்தி ஏற்ற மணமகன் உதவினார்.

தொடக்கத்தில் எப்போதாவது ஏற்பட்ட அந்தக் குறைபாடு 10 முதல் 15 நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர் அது ஏற்படும் சம்பவங்களும் நீடிக்கும் நேரமும் அதிகரித்தன. ஒருநாள் விட்டு ஒருநாள் ஏற்படும் குறைபாடு ஒரு மணி நேரம் வரை நீடித்தது.

2020ஆம் ஆண்டு கான்டேக்ட் லென்ஸ் தொடர்பான பிரச்சினைகளுக்கு கண் சிகிச்சை நிலையத்தை நாடியபோதுதான் அவர் ‘பைனாகுலர் டிப்லோபியா’ குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

“அவருக்கு அந்தக் குறைபாடு ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அதுபோன்ற நோயாளிகளின் எண்ணிக்கை சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையத்தில் குறைவாக இருந்தபோதிலும் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது,” என்றார் டாக்டர் லிங்.

குறிப்புச் சொற்கள்