சிங்கப்பூரில் மோசடி பயத்தால் பிறருக்கு உதவ தயக்கம்: ஆய்வு

சிங்கப்பூரில் மோசடி பயத்தால் பிறருக்கு உதவ தயக்கம்: ஆய்வு

2 mins read
af1b391f-425f-4ecb-94af-92649a1c03e2
மோசடிக்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சத்தில் ஒருசிலர் மட்டுமே கடந்த ஆண்டு ஒன்று அல்லது இரண்டு முறை பிறருக்கு உதவியதாகத் தெரிவித்தனர். - கோப்புப் படம்: சமூக ஊடகம்

மோசடிக்கு ஆளாவோம் என்ற அச்சத்தில், முன்பின் தெரியாதோருக்கு உதவ சிங்கப்பூரில் உள்ளோர் தயங்குவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது.

‘ரீச் கம்யூனிட்டி சர்வீசஸ்’ என்னும் சமூக சேவை நிறுவனம் கடந்த மார்ச் மாதம் நடத்திய ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,000 பேர் கலந்துகொண்டனர்.

முன்பின் தெரியாதோருக்கு உதவும் போக்கின் நிலவரத்தை அறிய நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டன.

ஆய்வில் பங்கேற்றுப் பதிலளித்த வெவ்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த 95 விழுக்காட்டினர் தங்களை இரக்க குணம் கொண்டவர்களாகக் காட்டிக்கொண்டனர்.

இருப்பினும், அவர்களில் 42 விழுக்காட்டினர் மட்டும் கடந்த ஆண்டு ஒன்று அல்லது இரண்டு முறை பிறருக்கு உதவியதாகத் தெரிவித்தனர்.

மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை, மோசடிக்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சம் தடுப்பதை பெரும்பாலானோரிடம் ஆய்வு கண்டறிந்தது.

அந்த ஒரு காரணத்தால் மட்டுமே பிறருக்கு உதவாமல் இருக்கும் போக்கு 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடம் பரவலாகக் காணப்பட்டது.

ஆய்வை விளக்கி ஏப்ரல் 26ஆம் தேதி ‘ரீச் கம்யூனிட்டி சர்வீசஸ்’ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

“பிறர் நம்மைப் பயன்படுத்திக்கொள்வார்கள் அல்லது மோசடிக்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்சம், மதிப்பு குறைந்த வழிகளில் இரக்கத்தைக் காட்டத் தூண்டியது.

“விலையுயர்ந்த பொருளைக் கொடுப்பது, பொன்னான நேரத்தைச் செலவிடுவது ஆகியவற்றைத் தவிர்த்து சேவைகளையும் வார்த்தைகளையும் பயன்படுத்துவதாகப் பலரும் கூறினர்,” என்றது அந்த அறிக்கை.

மேலும், 45க்கும் 54க்கும் இடைப்பட்ட வயதினர் யாருக்கு, என்ன தேவை எனபதை அறிந்திராததால் பிறருக்கு அவர்கள் உதவி செய்யவில்லை என்பதையும் ஆய்வு கண்டறிந்தது. அதேபோல, உதவிசெய்ய நேரமில்லை என்று 18க்கும் 24க்கும் இடைப்பட்ட வயதினர் கூறினர்.

இந்த ஆய்வு முடிவுகள் தேசிய தொண்டூழிய, நன்கொடை நிலையம் கடந்த வாரம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை ஒத்து உள்ளது.

அந்த ஆய்வில் 2,000க்கும் அதிகமானோர் பங்கெடுத்தனர். மோசடிச் சம்பவங்களின் அதிகரிப்பைப் பிரதிபலிக்கும் விதமாக, பலரிடமும் மோசடி குறித்த கவலை இருப்பது தெரிவதாக நிலையம் அதன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 32 விழுக்காட்டினர், கடந்த ஆண்டு நன்கொடை அளிக்காததற்கு மோசடி குறித்த அச்சமே காரணம் என்று கூறினர். இந்த விகிதம், 2021ஆம் ஆண்டு காணப்பட்டதைக் காட்டிலும் 9% அதிகம்.

2023ஆம் ஆண்டு மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. அந்த ஆண்டில் மட்டும் 46,563 மோசடிச் சம்பவங்கள் பதிவாயின. 2022ஆம் ஆண்டு பதிவான 31,728 சம்பவங்களைக் காட்டிலும் அது 46.8 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்