கத்தியைக் காட்டி சிறுநீரைக் குடிக்கச் சொன்ன இளையருக்குத் தண்டனை

கத்தியைக் காட்டி சிறுநீரைக் குடிக்கச் சொன்ன இளையருக்குத் தண்டனை

1 mins read
58dbe37c-f821-4780-bf25-3986346cc3ce
தண்டனையின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் சிறுவர் இல்லத்தில் 100 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் பதின்ம வயதுப் பையனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

16 வயது சிறுவனின் கழுத்தில் வெட்டுக்கத்தியை வைத்து, ஆடைகளைக் களையுமாறும் போத்தலில் இருந்த சிறுநீரைக் குடிக்குமாறும் கட்டாயப்படுத்திய பதின்ம வயதுப் பையனுக்கு ஈராண்டு நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

தற்போது 18 வயது ஆகும் அந்தப் பையன், தண்டனையின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் சிறுவர் இல்லத்தில் 100 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) உத்தரவிட்டது.

மேலும், ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அந்த இளையர் எங்கும் செல்லக்கூடாது என்றும் நன்னடத்தைக்கு அவரது தாயார் $5,000 உறுதிப்பத்திரம் வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

ஏ1 என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பதின்ம வயது இளையரின் பெயரை வெளியிட அனுமதி இல்லை.

ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதையும் சட்டவிரோதமாகக் கூடியோரில் ஒருவராக இருந்ததையும் கடந்த ஏப்ரல் மாதம் ஏ1 ஒப்புக்கொண்டார்.

நான்கு பேருடன் இணைந்து அவர் குற்றத்தில் ஈடுபட்டார். குற்றச் செயல் நடைபெற்ற 2023 மார்ச் மாதம் அந்த நால்வரும் 15க்கும் 17க்கும் இடைப்பட்ட வயதினராக இருந்தனர்.

தமது தோழி ஒருவரை தொல்லை செய்த சிறுவனைத் தாக்க விரும்புவதாக 2023 மார்ச் மாதம் அந்த இளையர் தமது நான்கு நண்பர்களிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஒரு பொதுக் கழிவறையில் நண்பர்களுடன் சேர்ந்து அவர் அந்த சிறுவனைத் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்