கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் விதிகளை மீறி போதைப்பொருளுடன் பிறந்த நாள் விருந்து அளித்த குற்றத்தைப் புரிந்த ஆடவருக்கு ஈராண்டு, ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
பெருந்தொற்று பரவியபோது ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூடக்கூடாது என்ற விதிமுறை நடப்பில் இருந்தது. 2022ஆம் ஆண்டிலும் அந்த விதிமுறை தொடர்ந்தது.
2022 மார்ச் 26ஆம் தேதி இரவு 7 மணியளவில் எட்மண்ட் ஸெக்கரி ஓங் வெய் மிங் என்னும் 33 வயது சிங்கப்பூர் ஆடவர் மலேசிய ஆடவருடன் இணைந்து பிறந்தநாள் விருந்து ஒன்றை தமது இல்லத்தில் அளித்ததாக நம்பப்படுகிறது.
அந்த விருந்தில் 34 பேர் கலந்துகொண்டனர். சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் மறுநாளே ஆடவர்களைக் கைது செய்தனர். அவர்களில் 22 பேர் எக்ஸ்டஸி அல்லது எம்டிஎம்ஏ போதைப்பொருள் உட்கொண்டது அவர்களின் சிறுநீர்ப் பரிசோதனையில் தெரிய வந்தது.
தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை எட்மண்ட் கடந்த மே மாதம் ஒப்புக்கொண்டார். தமது வீட்டில் போதைப்பொருள் உட்கொள்ள அனுமதித்தது, போதைப்பொருள் உட்கொண்டது, பெருந்தொற்று காலத்தில் வீட்டுக்குள் மற்றவர்களை பிறந்தநாள் விருந்து கொண்டாட்டத்திற்கு அனுமதித்து ஆகியன அந்தக் குற்றச்சாட்டுகள்.
இதர இரண்டு வகை போதைப்பொருள்களை உட்கொண்டதாக சுமத்தப்பட்ட இதர இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் கொள்ளப்பட்டன.
எட்மண்ட்டுடன் இணைந்த விருந்து நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 35 வயது மலேசியரான ஜானத்தன் கோ வாய் செர்ன் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
2022 மார்ச் 26ஆம் தேதி இரவு 7 மணியளவில் வேறொருவருக்காக இந்த இருவரும் பிறந்தநாள் விருந்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
விருந்தில் ஒன்றுகூடியவர்கள் மது அருந்தினர், கரவோக்கே இசையில் ஆடினர், சாப்பிட்டனர், போதைப்பொருளை உட்கொண்டனர்.
மறுநாள் காலை 6 மணியளவில் காவல்துறையினர் அந்த வீட்டுக்கு வந்து எட்மண்டையும் இதர 34 பேரையும் கைது செய்தனர்.
காவல்துறைக்கு எவ்வாறு துப்பு கிடைத்தது என்பது தெரிவிக்கப்படவில்லை.

