சிங்கப்பூரின் முதல் பூமிக்கு அடியிலான சேவை நீர்த்தேக்கம், பிடாடாரி பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
தானியங்கிக் கட்டுப்பாட்டு அறை, மூன்று ஒலிம்பிக் நீச்சல்குளக் கொள்ளளவுடன் கட்டப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கம், அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏறத்தாழ 8,800 குடியிருப்புகளின் நீர்த்தேவையைப் பூர்த்திசெய்ய உள்ளது.
கட்டுமானம் முடிந்து தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ள இந்நீர்த்தேக்கம், 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, சிங்கப்பூர் அனைத்துலகத் தண்ணீர் வாரம், தூய்மையான சுற்றுப்புறம் தொடர்பான மாநாடுகளின் கூட்டுத் தொடக்க விழாவில் இக்கட்டுமானத்தின் நிறைவை அறிவித்தார்.
பிடாடாரி சேவை நீர்த்தேக்க அமைப்பின் முக்கிய அம்சங்கள்
பொதுப் பயனீட்டுக் கழகத்தால் 27 மில்லியன் வெள்ளி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கத்தில் 6.5 மீட்டர் ஆழமுள்ள இரண்டு பெரும் நீர்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிலத்திற்கு மேல், 700 சதுர மீட்டர் பரப்பளவிலான நிலப்பகுதியில், நீரை விநியோகிக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நீர்த்தேக்கம் நிலத்துக்கடியில் அமைந்துள்ளதால், 1500 சதுர மீட்டர் பரப்பளவிலான நிலம் வேறு பயன்பாடுகளுக்கு உதவலாம் என்றார் பொதுப் பயனீட்டுக் கழக மூத்த உதவி இயக்குநர் வரதராஜன்.
உச்சநேரமற்ற தருணங்களின்போது, சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து நீர் தருவிக்கப்பட்டு நீர்த்தொட்டிகளில் சேமிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அது முக்கிய நேரங்களின் (காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை; மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) நீர்த்தேவையைத் தடையின்றி பூர்த்தி செய்ய உதவும்.
மற்ற நீர்த்தேக்கங்களுடன் ஒப்புநோக்கும் வேறுபாடுகள்
தீவெங்கிலும் இதுவரை கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள், நீரோட்ட அழுத்தத்தைச் சீராக வைக்கும் வண்ணம், நிலத்திலிருந்து சற்றே உயர் மட்டத்தில், நீரோட்டம் இயற்கையான புவியீர்ப்பு விசையுடன் ஒத்துப்போகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தப் புதிய நீர்த்தேக்கம் முழுமையாக பூமிக்கு அடியில் இரண்டு மாடி அளவு ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் நீர்த்தேக்கம். இதனை குடியிருப்புகளுக்குக் கொண்டு செல்ல மையப்படுத்தப்பட்ட ஐந்து இயக்கிகள் (five centrally operated pumps) ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தீவெங்கிலும் நீர் விநியோகம் செய்யும் அமைப்புகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டால், அதை குடியிருப்புகளுக்குக் கொண்டு சேர்க்க குழாய்களும் அதிகம் அமைக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு குடியிருப்புகளுக்கு அருகே நீர்த்தேக்கம் அமைப்பது, குழாய்க் கட்டுமானங்களைக் குறைத்து, நீர்த்தேவையையும் பூர்த்தி செய்யும் என்றது கழகம்.
சிங்கப்பூரின் நீர்த் தேவை 2065ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் பிடாடாரி குடியிருப்புப் பேட்டையில் 10,000 குடியிருப்புகள் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில் அவற்றின் நீர்த்தேவையை சமாளிக்க இது திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

