6,938 புதிய வீவகவீடுகள் விற்பனை

6,938 புதிய வீவகவீடுகள் விற்பனை

2 mins read
d7fe4b3f-498a-44bc-86a9-fed181a61311
தெம்பனிஸ் வெஸ்ட் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே கட்டப்படும் தெம்பனிஸ் கிரின்டோபாஸ் கட்டுமானத் திட்டத்தில் 561 ஈரறை ஃபிளக்ஸி, நான்கு முதல் ஐந்து அறை வீடுகள் கட்டப்படுகின்றன. - படம்: வீவக தெம்பனிஸ் டோபாஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) , மேலும் 6,938 புதிய தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளை கட்டி விற்கவிருக்கிறது. இதற்கான விற்பனை அறிவிப்பை புதன்கிழமை (ஜூன் 19) அன்று அது வெளியிட்டது.

ஜூரோங் ஈஸ்ட், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் எட்டு கட்டுமானத் திட்டங்களின்கீழ் இவை கட்டப்படுகின்றன.

முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்தின்கீழ் கட்டப்படும் மூன்று வீட்டுத் திட்டங்களுக்கு மானியத்தை அதிகரிக்கப் போவதாகவும் வீவக தெரிவித்தது.

பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையில் பொது வீடுகளை வைத்திருப்பது இதன் நோக்கம் என்று வீவக குறிப்பிட்டது.

காலாங்/வாம்போ முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் உள்ள தஞ்சோங் ரூ ரிவர்ஃபிரண்ட் 1, 2, குவீன்ஸ்டவுனில் உள்ள ஹாலண்ட் விஸ்டா ஆகியன அம்மூன்று திட்டங்கள்.

ஆனால் தங்களுடைய வீடுகளை மறுவிற்பனை செய்யும் உரிமையாளர்களிடமிருந்து மானியம் திரும்பப் பெறப்படும். அது, மறுவிற்பனை வீட்டின் விலை அல்லது வீட்டின் மதிப்பில் எது அதிகமோ, அதில் 9 விழுக்காடாக இருக்கும். இது, வீடு வாங்கியபோது அவர்களுக்குக் கிடைத்த கூடுதல் மானியத்தை ஒத்து இருப்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக வீவக விளக்கியது.

கடந்த 2021ஆம் ஆண்டில் முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, திரும்பப் பெறப்படும் மானியம் 6 விழுக்காடாக இருந்தது.

முதன்மை அல்லது மத்திய வட்டாரங்களில் வீடுகளை வைத்திருப்போர், அவற்றை விற்கும்போது பெரும் பணம் கிடைக்கும் என்ற நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக மானியத்தைத் திரும்பப் பெறும் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2023 டிசம்பரில் இது 8 விழுக்காட்டாக அதிகரிக்கப்பட்டது.

“கூடுதல் மானியம், சந்தை விலையில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் அனைத்து வீடுகளுக்கு வழங்கப்படும் குறிப்பிடத்தக்க கழிவு ஆகியவை முதன்மை வட்டார வீட்டுத் திட்டங்கள் வழியாக விற்கப்படும் வீடுகளின் விலை, அருகில் விற்கப்படும் மறுவிற்பனை வீட்டின் விலையைவிடக் குறைவாக இருக்கும் என்று வீவக மேலும் தெரிவித்தது.

இத்தகைய வீடுகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் உரிமையாளர்கள் தங்கியிருப்பது அவசியம்.

குறிப்புச் சொற்கள்