சிங்கப்பூரில் 2003ஆம் ஆண்டிலிருந்து பணிப்பெண்ணாக வேலை செய்து வரும் ஒருவர், தனது விடுமுறை நாள்களில் சட்டவிரோதமாக பகுதி நேர வேலைகளைச் செய்து ஒரு வீட்டிலிருந்து 23,000 வெள்ளிக்கு மேல் சுருட்டினார்.
பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த எல்விரா கேடில்லா ஒர்லேன்ஸ் ஓர்டோனசுக்கு, 46, புதன்கிழமை ஏழு மாதம், ஒரு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஒரு திருட்டுக் குற்றமும் வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் மற்ற இரு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டது.
அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்போது அவர் மீதான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
2003ஆம் ஆண்டிலிருந்து எல்விரா சிங்கப்பூரில் பணிப் பெண்ணாக வேலை பார்த்து வருகிறார் என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் ஒரே ஒரு முதலாளியிடம் அவர் பணிப் பெண்ணாக வேலை செய்ய அனுதிக்கப்பட்டுள்ளார்.
இருந்தாலும் இருபது ஆண்டுகளாக தனது முதலாளிக்கு வேலை பார்த்து வந்த அவர், விடுமுறை நாள்களில் சட்டவிரோதமாக பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மணிக்கு 20 வெள்ளி அவர் சம்பாதித்தார். ஒரு வாடிக்கையாளருக்கு மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் அவர் வேலை செய்தார். மவுண்ட் சோபியாவில் கேத்தே ரெசிடென்சஸில் வாடகைக்குக் குடியிருந்த குடும்பத்துக்கும் அவர் பகுதிநேர வேலை செய்துள்ளார்.
அங்கு எல்விரா, ஏப்ரல் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை 26 முறை தூய்மைப் பணிகளைச் செய்தார். ஏறக்குறைய 2,700 வெள்ளி அவர் சம்பாதித்தார்.
எல்விராவுக்கு நிதி நெருக்கடி இருந்ததால் கூடுதல் பணம் தேவைப்பட்டது என்றும் கடன் முதலைகளிடம் அவர் கடன்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நொமு கண்டோமினிய வீட்டில் சிங்கப்பூரர் ஒருவருக்கும் அவர் சட்டவிரோதமாக பகுதிநேர தூய்மைப் பணிகளைச் செய்தார்.
அந்த வீட்டில் இருந்து மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை 18 சமயங்களில் அவர் மொத்தம் 23,650 வெள்ளி திருடினார்.
புதிய பண நோட்டுகளை தேடியபோது கிடைக்காததால் சந்தேகமடைந்த ஆடவர் காவல்துறையில் புகார் அளித்ததால் அவரது திருட்டு வெளிப்பட்டது.
2024 ஏப்ரலில் பிளாசா சிங்கப்பூராவில் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
தமது வாழ்க்கையில் பாதியை ஏறக்குறைய 22 ஆண்டுகள் ஒரு முதலாளிக்கு பணிப் பெண்ணாக வேலை செய்துவிட்டதை சுட்டிக்காட்டிய பணிப் பெண் இரக்கம் காட்டுமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டார். தமது தவறுக்கு வருந்துவதாகவும் அவர் கூறினார்.