பக்தி என்ற பெயரில் $7 மில்லியனுக்கு மேல் மோசடி செய்தது மட்டுமல்லாமல் நம்பி வந்த சீடர்களை மலம் தின்னக் கட்டாயப்படுத்திய பெண்ணுக்கு புதன்கிழமை (ஜூன் 19) பத்து ஆண்டு, ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
தம் மீது சுமத்தப்பட்ட மூன்று தாக்குதல் குற்றச்சாட்டுகளையும் 2 மோசடி குற்றச்சாட்டுகளையும் மே மாதம் அவர் ஒப்புக்கொண்டார். இதர 45 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
54 வயது சிங்கப்பூரரான வூ மே ஹோ என்னும் அந்தப் பெண் தம்மிடம் தெய்வ சக்தி இருப்பதாகக் கூறிக்கொண்டார். தங்களை அவர் ஆன்மிகப் பாதையில் அழைத்துச் செல்வார் என்று நம்பி 30 பேர் அவரிடம் சீடர்களாகச் சேர்ந்தனர்.
ஸ்ரீசக்தி நாராயணி அம்மா என்னும் ஆன்மிகத் தலைவரின் அமைப்புக்குத் தலைமை ஏற்றிருப்பதாக அவர் சொல்லிக்கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. இருப்பினும் ‘அம்மா’ என்பது பற்றி எந்த ஒரு விவரமும் அதில் இல்லை.
பொதுமக்கள் தரும் நன்கொடைப் பணம் இந்தியாவில் உள்ள ‘அம்மா’ அமைப்புக்குப் போய்ச் சேரும் என்று தெரிவித்த அவர், அதற்கு முரணாக 2012 முதல் 2020 வரையில் சேர்ந்த பணத்தை தம்வசம் வைத்துக்கொண்டார்.
அவரது சீடர்கள் அல்லது உறவினர்களில் பலர் கடுமையான உடல்நலப் பாதிப்புகளில் இருந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் இதற்கு முன்னர் நடைபெற்ற விசாரணையில் குறிப்பிட்டு இருந்தார்.
உடல்நிலை தேற கெட்ட கர்மாவை அழித்து நல்ல கர்மாவை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தப் பெண் சொல்லிவந்தார். அவ்வாறு செய்ய இந்தியாவில் உள்ள ‘அம்மா’ அமைப்புக்கு நன்கொடை தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வீடுகள், கொண்டோமினிய வீடுகள், கார்கள் போன்றவற்றை வழிபாட்டுக் கடமைகளாக வாங்க சீடர்களுக்கு உத்தரவிட்ட அந்தப் பெண், அந்த வசதிகளை எல்லாம் தமது சொந்த நலனுக்குப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தமது சீடர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தமக்கு சொந்தச் சேவைகள் செய்ய வேண்டும் என்று பணித்தார். அதன்படி, வீட்டு வேலைகள் உட்பட பெண்ணுக்குத் தேவையான அனைத்து பணிவிடைகளையும் அந்த சீடர்கள் முழுநேரமாகச் செய்தனர்.
தமது விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்வோரை அந்தப் பெண், பெயிண்ட் பிரஷ் உள்ளிட்ட பொருள்களால் தாக்கியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார். அவ்வாறு தாக்கப்பட்டவர்களில் 43 வயதுப் பெண்ணும் அடங்குவார்.
இது தவிர, தவறு செய்த பல சீடர்களை மனித மலம் தின்னுமாறு அவர் கட்டாயப்படுத்தினார்.
2020ஆம் ஆண்டு சீடர்கள் சிலர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வூ மே ஹோ கைது செய்யப்பட்டார்.

