ஜூரோங் புத்தாக்க வட்டார கரிமக் குறைப்புக்கு ஜேடிசி $4 மில்லியன் உதவி

ஜூரோங் புத்தாக்க வட்டார கரிமக் குறைப்புக்கு ஜேடிசி $4 மில்லியன் உதவி

2 mins read
5dc6a224-1ac4-41b2-8ba8-db13d8a409c4
புத்தாக்க நடவடிக்கை மூலம் பொதுமக்களிடம் இருந்து ஜேடிசி யோசனைகளைத் திரட்டும். - படம்: ஜேடிசி

ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தில் உள்ள நிறுவனங்களின் கரிம நீக்க முயற்சிகளை ஆதரிக்க ஜேடிசி எனப்படும் ஜூரோங் நகராண்மைக் கழகம் $4 மில்லியன் உதவ முன்வந்துள்ளது.

என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து புத்தாக்க நடவடிக்கையை, தான் தொடங்கி இருப்பதாக ஜேடிசி புதன்கிழமை (ஜூன் 19) அறிவித்தது.

ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தில் வாடகைக்கும் குத்தகைக்கும் இயங்கும் நிறுவனங்கள் கரிமத்தைக் குறைக்கும் முயற்சிகளை ஆதரிப்பது அந்த நடவடிக்கையின் நோக்கம்.

அதற்காக $4 மில்லியன் ஜேடிசி ஒதுக்குகிறது. புத்தாக்க வட்டார நிறுவனங்கள் தண்ணீர், மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்திலான முயற்சிகளுக்கும் அது ஆதரவு அளிக்கும்.

அத்துடன், பொருள்கள் வீணாவதைக் குறைக்கவும் புத்தாக்க வட்டாரத்தின் கரிமப் பயன்பாட்டைக் குறைக்கவும் ஆதரவு வழங்கப்போவதாகவும் அது தெரிவித்து உள்ளது.

பொதுத் துறை அமைப்புகள் மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து அந்த நிறுவனங்கள் தீர்வுகளை உருவாக்குவதோடு அவற்றை புதிய கரிமநீக்க சோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்யவும் அவற்றை அமல்படுத்தவும் முயலும்.

அந்தச் சோதனைக்கூடம், ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தில் புதிய கரிமச் சேமிப்பு புத்தாக்கங்களுக்கான சோதனை ஓட்டமாகப் பயன்படுத்தப்படும்.

புத்தாக்க நடவடிக்கை மூலம் பொதுமக்களிடம் இருந்து ஜேடிசி யோசனைகளைத் திரட்டும்.

தொழிற்கூடங்களை நடத்துவோரையும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பில் உள்ளோரையும் உள்ளடக்கிய குழு அந்த யோசனைகளையும் 2025ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் செயல்திட்டங்களை வழங்குவது பற்றியும் பரிசீலிக்கும்.

தனது கரிம வெளிப்பாட்டின் பெரும்பகுதியை ‘ஸ்கோப் 3’ என்று ஜேடிசி வகைப்படுத்தி உள்ளது. ஜேடிசியின் கட்டுப்பாட்டில் இல்லாத தமக்குத் தொடர்பில்லாத, அதேநேரம் வாடகைக்கும் குத்தகைக்கும் உள்ள நிறுவனங்களில் இருந்து வெளிப்படும் கரிமத்தை அது குறிக்கிறது.

‘ஸ்கோப் 3’ வெளிப்பாட்டைக் குறைக்க எல்லாத் தரப்பு விநியோகத் தொடர் நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் ஒத்துழைப்பு தேவை.

நீடித்த நிலைக்கக்கூடிய அம்சங்களுக்கான சவால்களில் ஆரம்பக்கட்ட திறன்களைக் கொண்ட ஜேடிசியின் வாடிக்கையாளர்களுக்குச் சேவைபுரிவதை சோதனைக்கூடங்களும் புத்தாக்க நடவடிக்கைகளும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்