எண்ணெய்க் கசிவினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டு உள்ள தாக்கத்தின் அளவை முழுமையாகக் கணக்கிட நாளாகும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்து உள்ளார்.
ஜூன் 14ஆம் தேதி நிகழ்ந்த எண்ணெய்க் கசிவின் தாக்கம் பரவலானது என்றும் அதன் தாக்கம் இன்னும் உணரப்படுவதாகவும் அவர் கூறினார்.
“எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யவும் சுற்றுச்சூழல் தாக்கத்தின் அளவை முழுமையாகக் கணிக்கவும் நாள்கள் தேவைப்படும்.
“மீட்புப் பணிகளையும் மறுசீரமைப்புப் பணிகளையும் இன்னும் செய்ய வேண்டி உள்ளது,” என்று திரு லீ புதன்கிழமை (ஜூன் 19) கூறினார்.
ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தில் அரசாங்க அமைப்புகள் மிகவேகமாகச் செயல்பட்டதாகவும் உடனடி தாக்கத்தைக் குறைக்கவும் சுத்தப்படுத்தவும் அவை ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும் திரு லீ கூறினார்.
பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கப்பல் மீது தூர்வாரும் படகு ஒன்று மோதியதில் பெரிய அளவிலான எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது குறித்து தகவல் கிடைத்த 11 நிமிடங்களுக்குள் சிங்கப்பூரின் துறைமுக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) தெரிவிக்கப்பட்டது.