அங் மோ கியோ ஹப் கடைத்தொகுதியில் உள்ள கேத்தே சினிபிளெக்ஸ் திரையரங்கங்கள் இம்மாத இறுதியில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
17 ஆண்டு வர்த்தகம் புரிந்த பின்னர் அந்த திரையரங்கங்கள் ஜூன் 30ஆம் தேதியுடன் கதவுகளை மூட இருப்பதாக கேத்தே சினிபிளெக்ஸ் நிறுவனம் புதன்கிழமை (ஜூன் 30) தனது ஃபேஸ்புக்கில் அறிவித்தது.
“எங்களது குத்தகைக் காலம் முடிவுக்கு வருவதால் 2024 ஜூன் 30ஆம் தேதியுடன் எங்களது திரையரங்கப் பணிகளை முடித்துக்கொள்கிறோம்,” என்றது அந்த அறிவிப்பு.
ஜூன் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அந்தத் திரையரங்கங்களில் இறுதிக் காட்சிகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேத்தே சினிபிளெக்ஸ் நிறுவனம் கடந்த ஈராண்டுகளில் மூடும் நான்காவது திரையரங்கம் இது.
இவை மூடப்பட்டாலும் இன்னும் ஐந்து திரையரங்கங்கள் எஞ்சி உள்ளன. காஸ்வே பாய்ண்ட், டௌன்டவுன் ஈஸ்ட், வெஸ்ட் மால், ஜெம், செஞ்சுரி ஸ்குவேர் ஆகிய இடங்களில் அவை இயங்குகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பார்க்வே பரேட் திரையரங்கங்கள் மூடப்பட்டபோது சிங்கப்பூரில் உள்ள தனது திரையரங்க வர்த்தகத்தைத் ஒழுங்குபடுத்த அதனை மூடும் முடிவு எடுக்கப்பட்டதாக கேத்தே சினிபிளெக்ஸ் கூறியிருந்தது.

