செம்பவாங்கில் இளையரை வெட்டியதாக நம்பப்படும் பதின்ம வயதுப் பையன் கைது

செம்பவாங்கில் இளையரை வெட்டியதாக நம்பப்படும் பதின்ம வயதுப் பையன் கைது

1 mins read
d1c9535a-c89f-438a-9c21-e0a29de20d45
அதிகாலையில் நடைபெற்ற சண்டை தொடர்பாக 4 பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டனர். - படம்: சமூக ஊடகம்

செம்பவாங் வட்டாரத்தில் வெட்டுக்கத்தியைப் பயன்படுத்தி நடைபெற்ற சண்டை தொடர்பில் நான்கு பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

செம்பவாங் டிரைவ் புளோக் 466ல் நடைபெற்ற அச்சம்பவம் குறித்து ஜூன் 15 அதிகாலை 4.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை புதன்கிழமை (ஜூன் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

20 வயது இளையரை பதின்ம வயதுப் பையன் வெட்டியதாக நம்பப்படுவதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

உட்லண்ட்ஸ் காவல்துறை பிரிவு, காவல்துறை சிறப்புச் செயற்பாட்டுத் தளபத்தியம், ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் காவல்துறையின் கண்காணிப்புக் கருவிகளில் பதிவான படங்களின் உதவியுடன் நான்கு பதின்ம வயதினரை அடையாளம் கண்டனர்.

வெட்டுக்கத்தியுடன் இருந்த 19 வயது இளையர் புதன்கிழமை (ஜூன் 19) கைது செய்யப்பட்டார். அவர்மீது வியாழக்கிழமை (ஜூன் 20) ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதம், பிரம்படி போன்றவையும் அவருக்கு விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்