இவ்வாண்டு மார்ச் மாதம் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
தொழிலாளர் சந்தை பற்றிய ஆக அண்மைய காலாண்டு அறிக்கை ஏறுமாறான நிலையை காட்டுகிறது.
இருப்பினும், வேலை தேடுவோரின் எண்ணிக்கையைவிட வேலைவாய்ப்புகள் அதிகம் இருப்பதால் தொழிலாளர் சந்தை இறுக்கமாகவே இருப்பதாக இவ்வாண்டு முதல் காலாண்டு மனிதவள தொழிலாளர் சந்தை நிலவரம் குறித்த மனிதவள அமைச்சின் அறிக்கை கூறுகிறது.
இவ்வாண்டு மார்ச் மாதம் 81,900 வேலைவாய்ப்புகள் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. இது 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாத வேலைவாய்ப்பு எண்ணிக்கையான 79,800ஐ விட அதிகம் என்று அறிக்கை சுட்டியது.
“இது 2024ஆம் ஆண்டு பொருளியல் சூழல் மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது,” என்று மனிதவள அமைச்சு விளக்கியது.
இதில் உயர் உற்பத்தித் திறன், வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் வளர்ச்சித் துறைகளில் உள்ளன. அவை மொத்த வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கு என மனிதவள அமைச்சின் அறிக்கை கூறுகிறது.
அவற்றில் சுகாதார மற்றும் சமுதாய சேவைத் துறை, தகவல், தொடர்பு, நிபுணத்துவ சேவை, நிதி மற்றும் காப்புறுதி சேவை ஆகிய துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும், வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடும்போது வேலை இல்லாதோரின் விகிதம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1.74 ஆக இருந்தது. இந்த விகிதம் இவ்வாண்டு மார்ச் மாதம் 1.56ஆக குறைந்ததாகக் கூறப்படுகிறது. இது வேலை இல்லாதோரின் எண்ணிக்கை சற்றே அதிகரித்ததால் ஏற்பட்டது என்று அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விகிதம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2.54ஆக இருந்ததாகவும் அதிலிருந்து தொடர்ச்சியாக குறைந்து வந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில், ஆட்குறைப்பு எண்ணிக்கை இரண்டாம் காலாண்டாகத் தொடர்ந்து குறைந்து வந்துள்ளதாக அமைச்சு கூறியது. அது 2023ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 3,460லிருந்து இவ்வாண்டு முதல் காலாண்டில் 3,030ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்குறைப்பு எண்ணிக்கை குறைந்ததற்கு ஒட்டுமொத்த வர்த்தகம், மின்னியல் உற்பத்தி ஆகிய வெளி வட்டாரம் சார்ந்த துறைகளில் ஆட்குறைப்பு எண்ணிக்கை இறக்கம் கண்டதே காரணம் என்பதை அமைச்சு தெளிவுபடுத்தியது.


