தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு 0.45 மாத போனஸ்

2 mins read
c1cebcaa-e8cf-4781-86c3-0db9fc8aa659
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 0.3 மாத போனசைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அரசாங்க ஊழியர்களுக்கு ஆண்டு நடுப்பகுதி போனசாக 0.45 மாத சம்பளம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 0.3 மாத போனசைக் காட்டிலும் அதிகம்.

பொதுச் சேவைத் துறை வியாழக்கிழமை (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கையில் புதிய போனஸ் விகிதத்தை அறிவித்தது.

இடையாண்டு போனஸ் சிறந்த பொருளியல் நிலவரத்தையும் உலகப் பொருளியல் சரிவடையும் அபாயம் தொடர்ந்து நீடிப்பதையும் கவனத்தில் கொண்டு கணக்கிடப்பட்டதாக அது தெரிவித்தது.

போனசுடன், எம்எக்ஸ்13(i)க்குச் சமமான பதவி வரிசையில் உள்ள அரசாங்க ஊழியர்கள் ஒருமுறை அளிக்கப்படும் தொகை $150 பெறுவர்.

அதேநேரம், எம்எக்ஸ்15 மற்றும் எம்எக்ஸ்16 பதவி வரிசையில் உள்ளவர்களும் செயல்முறை ஆதரவுத் திட்ட வரிசை III முதல் V வரை உள்ள ஊழியர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் தொகை $250 கிடைக்கும்.

இளநிலை அதிகாரிகளுக்கான இந்தத் தொகை 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டதைக் காட்டிலும் சற்று குறைவாகக் கிடைக்கும்.

அவர்கள் அந்த ஆண்டுகளில் $200 முதல் $400 வரையிலும் 2021ஆம் ஆண்டு $350 முதல் $700 வரையிலும் பெற்றார்கள்.

சிங்கப்பூரின் பொருளியல் ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 2.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அதற்கு முந்திய காலாண்டில் பதிவான 2.2 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம் என்று பொதுச் சேவைத் துறை கூறியது.

காலாண்டுக்குக் காலாண்டு பருவத்திற்கேற்ப சரிசெய்யப்படுவதன் அடிப்படையில் பொருளியல் 0.1 விழுக்காடு விரிவடைந்தது. இந்த விகிதம் அதற்கு முந்திய காலாண்டில் 1.2 ஆக இருந்தது.

இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை இருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்து இருந்ததை பொதுச் சேவைத் துறை மேற்கோள் காட்டி உள்ளது.

வெளிப்புற பொருளியல் சூழல் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடர்ந்த மீட்சிநிலையில் இருந்ததைக் கவனத்தில் கொண்டு, உலகப் பொருளியல் நிலவரம் சரியும் அபாயத்திற்கு இடையிலும் அந்த முன்னுரைப்பு செய்யப்பட்டது.

சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்பு தொடர்ந்து கணிசமான வேகத்தில் விரிவடைந்து வருவதாகவும் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைவாக உள்ளது என்றும் பொதுச் சேவைத் துறை சுட்டியது.

குறிப்புச் சொற்கள்