‘ஒன்றாய் ஒன்றுபட்ட மக்களாய்’ எனும் கருப்பொருளில் நடக்கவுள்ள 2024ஆம் ஆண்டின் தேசிய தின அணிவகுப்பு பல்வேறு புதிய அம்சங்களுடன் களைகட்டும்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மின்னியல் தீயணைப்பு வாகனம், இலகுரக இயந்திரத் துப்பாக்கி, பொதுப் பயனீட்டுக் கழகத் தண்ணீர் வண்டி, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க டிரான்ஸ்போர்ட்டர் ஆகியவை முதன்முறையாக இவ்வாண்டு அணிவகுப்பில் அறிமுகம் காண்கின்றன.
மொத்தம் 35 வெவ்வேறு படைப் பிரிவுகளைச் சேர்ந்த 2,100க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.
முழுமைத் தற்காப்பின் நாற்பதாம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக, பார்வையாளர்கள் ‘முழுமைத் தற்காப்பு 40’ அங்கத்தை அணிவகுப்பில் காணலாம்.
மேலும் முழுமைத் தற்காப்பின் அணிவகுப்பு அங்கம், வான், கடல்சார் அச்சுறுத்தல்கள், சமூகப் பதற்றம் உள்ளிட்ட இடையூறுகளைச் சமாளிக்க சிங்கப்பூரின் தயார் நிலையையும் பறைசாற்றும்.
சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை நினைவுகூரும் விதமாக சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த ஏழு குழுக்கள் உள்பட ஒன்பது பள்ளிகளின் இசைக் குழுக்களைச் சேர்ந்த 130 மாணவர்கள் தயாரித்த இசைக் காணொளி காட்சிப்படுத்தப்படும்.
இவ்வாண்டு முதன்முறையாக பாடாங்கில் ‘முன்னோக்கிய அணிவகுப்பு’ அங்கம் நடக்கும்போது, சில அணிவகுப்புக் குழுக்கள் பார்வையாளர்களை நோக்கி அணிவகுத்து அவர்களுக்கு மிக அருகில் சென்று உற்சாகமளிப்பர்.
கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் தொண்டூழியர் படையும் உள்துறைக் குழு தொண்டூழியர் கட்டமைப்பும் இவ்வாண்டு அணிவகுப்பில் மீண்டும் பங்கேற்க உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மரினா நீர் வடிநிலத்தில், 2.62 கிலோமீட்டர் தூரம், ஏறத்தாழ 30 நிமிடம் நீடிக்கும் அதிபருக்கான 21 குண்டு மரியாதை முழக்கமும் இடம்பெற உள்ளது.
பங்கேற்பாளர்களின் விருப்பங்களான இராணுவ இசைத்திறன் காட்சி, மாநிலக் கொடி பறப்பு உள்ளிட்டவை வழக்கம் போல இடம்பெறும்.
பாடாங்கின் துடிப்பான தற்காப்புக் காட்சிகளை மேலும் பல சிங்கப்பூரர்கள் கண்டுகளிக்க ஏதுவாக, அவை மரினா பே நீர்ப் பகுதி வரை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுக்களை ஒன்றிணைத்து பயிற்சியளிக்கும் சையது அப்துல் காதர்
மாஸ்டர் வாரண்ட் அதிகாரியான முகமது அயூப் சையது அப்துல் காதர், 42, இவ்வாண்டு அணிவகுப்பின் ரெஜிமென்டல் சார்ஜன்ட் மேஜராகப் பொறுப்பேற்றது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறார்.
“அணிவகுப்புக் பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அணிவகுப்பு சிறப்பாக நடைபெறும் என நம்புகிறேன்” என்றார்.
இது தனக்குக் கிடைத்த பெரும்பேறு எனச் சொல்லும் இவர், அணிவகுப்பு தினத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச் சொன்னார்.
‘ஸ்பைடர்’ அமைப்பின் பொறுப்பாளர் குமரன்
ஆகாயப்படையின் ஒரு பகுதியான ‘ஸ்பைடர்’ அமைப்பின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் முதலாம் சார்ஜண்ட் குமரன் தனபால்,25.
அதனைச் சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் இயக்குவது தமது பொறுப்பு என்று கூறிய அவர், அதனை நிறைவேற்ற உற்சாகத்துடன் காத்திருப்பதாகவும் சொன்னார்.
விமானப்படைத் தற்காப்பு அமைப்புகளின் நிபுணரான இவர், “தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க வேண்டுமென்ற கனவு நிறைவேறியதாக உணர்கிறேன்,” என்று கூறினார். அது தமது தாயாருக்கு மிகவும் பெருமை அளிக்கும் தருணமாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
விமானப்படை பொறியாளர் பர்வின்
தமது முதல் தேசிய தின அணிவகுப்பு இது என்பது உற்சாகத்தையும், அது ஒன்றிணைப்பை வலியுறுத்துகிறது என்பது கூடுதல் பெருமையையும் அளிப்பதாகக் கூறினார் சிங்கப்பூர் ஆகாயப்படை கௌரவக் காவல் அணிக் குழுவின் பர்வின் பாஷோக், 25.
“இதுவரை அணிவகுப்புகளைத் தொலைக்காட்சியில் மட்டுமே கண்டுகளித்த எனக்கு, அதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது எதிர்பாராதது,” என்றார் ராணுவ வல்லுநரான பர்வின்.

