குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் தங்கள் செயல்களுக்கு உதவ டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பதின்ம வயதினரை ஈர்க்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக, உரிமமின்றி கடன் வழங்கும் செயல்களில் ஈடுபடும் இளையர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு டெலிகிராம் செயலி மூலம் ஈர்க்கப்படும் இளையர்களுக்கு வெகு விரைவில் ரொக்கம் கைக்கு வந்து சேரும் என்றும் உறுதியளிக்கப்படுகிறது.
இதுபோன்ற குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்ட 14 வயதிலிருந்து 19 வயதுக்கு உட்பட்ட இளையர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் 8.6% என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடும் இளையர் குறித்து குறிப்பிட்ட எண்ணிக்கையை காவல்துறை வெளியிட மறுத்துவிட்டது. ஆனால், இதுபோன்ற குற்றச்செயல்களில் 2023ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் ஈடுபட்ட இளையர் விகிதம் 3.1% என காவல்துறை விளக்கியது.
இந்தப் போக்கு குறித்து கருத்துரைத்த காவல்துறை உதவி கண்காணிப்பாளர் மைக்கல் ஹோ, விரைவாக ரொக்கப் பணம் கைக்கு கிடைக்கும் என ஆசை காட்டி இளையர்கள் குற்றச்செயல்களுக்கு இழுக்கப்படுகின்றனர் என்றார்.
“இந்த இளையர்கள் டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் திரட்டப்படுகின்றனர்,” என்று உதவி கண்காணிப்பாளர் மைக்கல் ஹோ விளக்கினார். அத்துடன், இளையர்களின் நண்பர்களும் ரொக்கப் பணம் கிடைக்கும் வாய்ப்புப் பற்றிக் கூறி இளையர்களை இதில் ஈர்க்கின்றனர் என்று பிடோக் காவல்துறை பிரிவின் உரிமமில்லா கடன் வழங்கும் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த மைக்கல் ஹோ விவரித்தார்.
சட்டவிரோத கடன் வழங்குவது தொடர்பாக 150 விளம்பரங்கள் டெலிகிராம் செயலியில் வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் வீட்டுக் கதவுகளைத் தட்டி தொல்லை தரும் கடிதங்களை அனுப்புவோருக்கு $100 தரப்படுவதாகவும், வீடுகளில் சாயம் தெளிப்பதற்கு $300லிருந்து $750 வரை தரப்படுவதாகவும் கூறப்படுகிறது.