ஈசூனில் வியாழக்கிழமை (ஜூன் 20ஆம் தேதி) மாலை விளக்குக் கம்பம் மீது தனது காரை மோதிய ஆடவர் அந்த காரையும் அதில் தன்கூடப் பயணம் செய்த மாதையும் விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்.
தற்பொழுது அவரைத் தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
காரில் இருந்த 32 வயது பெண் பயணி போதைப் பொருள் உட்கொண்ட, வைத்திருந்த குற்றங்கள், போதைப் பொருள் தொடர்பான உபகரணங்கள், ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருந்தவருடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்கள் புரிந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 21ஆம் தேதி) தெரிவித்தது.
இதுபற்றிக் கூறிய காவல்துறை வியாழக்கிழமை (ஜூன் 20ஆம் தேதி) அன்று இரவு சுமார் 8.15 மணிக்கு ஈசூன் ஸ்திரீட் 72, புளோக் 746லிருந்து உதவி கேட்டு தங்களுக்கு அழைப்பு வந்தததாகத் தெரிவிக்கின்றனர்.
அவ்விடத்துக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் அங்கிருந்து கார் ஒன்று விரைந்து சென்றதாகவும் அது ஸ்திரீட் 71ல் சறுக்கியதாகவும் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் வாகனத்தை அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்ததாக விளக்கமளித்தனர். இந்நிலையில் காரிலிருந்த பெண் பயணியை தாங்கள் கைது செய்ததாக கூறுகின்றனர்.
காரில் பலவிதமான ஆயுதங்களையும் போதைப் பொருள் அது தொடர்பான உபகரணங்களையும் தாங்கள் கண்டதாகக் காவல்துறை கூறுகிறது.

