மின்னியல் சாதனங்கள், ஒளித்திரை பார்க்கும் நேரத்துக்கு கட்டுப்பாடு

மின்னியல் சாதனங்கள், ஒளித்திரை பார்க்கும் நேரத்துக்கு கட்டுப்பாடு

2 mins read
மின்னியல் சாதனங்கள், சமூக ஊடகங்கள் வாழ்வின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பதன் எதிரொலி
f95d1c33-c18d-44c0-abb5-7661a55ef4eb
சிறுவர்களின் மனநல, மூளை வளர்ச்சி, நிர்வாக செயல்பாடு ஆகியவை பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மின்னியல் சாதனங்கள், ஊடகங்கள் ஆகியவை வாழ்வின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வருகின்றன.

இதனால், அடுத்து வரும் மாதங்களில் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கப்பட உள்ளது.

இதை வெள்ளிக்கிழமை (ஜூன் 21ஆம் தேதி) அன்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தங்கள் தனித்தனி ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தனர்.

இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதால் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் மனநலம் மோசமடைவதற்கு காரணமாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால், தீர்க்கமான, பலன் தரக்கூடிய நடவடிக்கைகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாம் வழங்கவிருக்கும் அறிவுரையை மேலும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருக்கும்படி செய்யலாம். அதை அனைத்து சுகாதார தளங்களிலும் தொடர்ந்து தெளிவாக தெரிவித்து அடிக்கடி நினைவூட்டலாம். அவற்றை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வீடுகளிலும் அவற்றைக் கடைப்பிடிக்குமாறு ஊக்குவிக்கலாம்.

“இவை தொடர்பான திட்டங்களை இறுதி செய்து வரும் மாதங்களில் அறிவிப்போம்,” என்று அவ்விரு அமைச்சர்களும் விளக்கமளித்தனர்.

சமூக ஊடகத் தளங்களால் பதின்மவயதினருக்கு மனநல பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றில் எச்சரிக்கை அறிவிப்பு இருக்க வேண்டும் என அமெரிக்கத் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி அண்மையில் கூறியிருந்தார்.

இயற்கையாகவே, சமூக ஊடகங்கள் அவற்றைப் பயன்படுத்தி அதற்கு நாம் கட்டுண்டுபோகும் நிலையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மனநலன் பாதிப்புக்கு அவை முக்கிய பங்கு வகிப்பதாக டாக்டர் மூர்த்தி கூறியதை இரு அமைச்சர்களும் தங்கள் பதிவில் சுட்டினர்.

குறிப்புச் சொற்கள்