ஜூலை 12ஆம் தேதி காமன்வெல்த் டிரைவ் ‘ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய’ குடமுழுக்கு விழா

2 mins read
a2a56048-4cf3-4b1c-a12b-a3ed1008a4af
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. - படம்: த. கவி
multi-img1 of 2

காமன்வெல்த் டிரைவ் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தின் குடமுழுக்கு வரும் ஜூலை மாதம் 12ஆம் நாள் நடைபெறவுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த குடமுழுக்கைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இக்குடமுழுக்கு விழாவையொட்டி கோவில் புதுப்பிப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

கோவில் கோபுரப் புதுப்பிப்பு, வர்ண வேலைப்பாடுகளை இந்தியாவிலிருந்து வந்துள்ள ஸ்தபதி குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜ கோபுரத்தில் சப்த முனி, குதிரை வாகன சிலைகள் உள்ளிட்டவை புதிதாக நிறுவப்பட்டுள்ளன. கோவிலின் உட்புறத்தில் இழைக் கண்ணாடியாலான (Fibreglass) முனீஸ்வரன் திருவுருவம் அமைக்கப்பட உள்ளது. 

ஏறத்தாழ 1.5 மில்லியன் வெள்ளி செலவில் கோவில் புதுப்பிக்கப்படுவதாக கோவிலின் நிர்வாகக் குழுத் தலைவர் திரு ரெத்தினம் செல்வராஜு தெரிவித்தார்.

கடந்த 1930களில் முனியாண்டி கோவிலாக குயின்ஸ்வே பகுதியில் அறியப்பட்ட இக்கோவில், 1960களில் ஆலயமாக எழுப்பப்பட்டது. அப்போதிலிருந்து 1990கள் வரை இந்து சமூகத்தினர் பலரது விருப்பத் தலமாக இயங்கி வந்தது.

குயின்ஸ்வே ரயில்வே பகுதியில் இயங்கி வந்த இக்கோவில் 1990களில் தற்போது உள்ள காமன்வெல்த் பகுதிக்கு மாற்றப்பட்டது.

சமய வழிபாட்டு இடமாகத் திகழ்வதுடன் இந்திய சமூகத்தினரின் கலாசாரக் கூறுகளைப் போற்றும் வகையிலும் பல்வேறு தொண்டுகளை இக்கோவில் குழு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. - படம்: த.கவி
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தின் மேல் விதானத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தின் மேல் விதானத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. - படம்: த.கவி

குடமுழுக்கு நிகழ்வுகள்

ஜூலை 12 அன்று காலை 5 மணிக்கு வழிபாடுகள் தொடங்கி, 6.30 மணியளவில் இக்குடமுழுக்கு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ளதாகவும் நிர்வாகம் கூறியது.

குடமுழுக்கன்று காலை 5.45 மணிக்கு கலசம் புறப்பட்டு, 6.40 முதல் 6.55 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

குடமுழுக்கு விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் 12 கால பூஜைகள் நடைபெறுவதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

யாகசாலைகளில் வழிபாடு நேரங்கள் தவிர பிற நேரங்களில் நாதஸ்வர கச்சேரிகளும், திருமுறை, வேத பாராயணம் ஆகியவையும் நடைபெறுகின்றன.

குடமுழுக்கைத் தொடர்ந்து 48ஆவது நாளன்று மண்டலாபிஷேக பூர்த்தி ஹோமமும், சிறப்பு படையல் புஜையும், வெள்ளிரத வீதியுலாவும் நடைபெறும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராஜ கோபுரத்தில் சப்த முனி, குதிரை வாகனச் சிலைகள் உள்ளிட்டவை புதிதாக நிறுவப்பட்டுள்ளன.
ராஜ கோபுரத்தில் சப்த முனி, குதிரை வாகனச் சிலைகள் உள்ளிட்டவை புதிதாக நிறுவப்பட்டுள்ளன. - படம்: த.கவி
குறிப்புச் சொற்கள்