வெள்ளிக்கிழமை (ஜூன் 21ஆம் தேதி) அதிகாலை சுமார் 4.00 மணிக்கு சாங்கி விமான நிலைய இணையத்தளத்துக்கு சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது.
எனினும், இந்த இடையூறால் விமான நிலைய நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகிக்கும் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
“சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலையிட்டு சிறிது நேரத்தில் இணைய சேவையை சரிசெய்தது,” என்று சாங்கி விமான நிலையக் குழுமம் கூறியது.
சாங்கி விமான நிலையத்துக்கு வருகை தரும், புறப்படும் விமானங்கள், விமான நிலைய முனையங்கள் தொடர்பான விவரங்கள் வழங்கும் அந்த இணைய சேவை கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் செயலிழந்து இருந்தது.
இது குறித்து கருத்துரைத்த சிங்கப்பூர் இணைய பாதுகாப்பு முகவை விமான நிலைய இணையதளத்துக்கு இடையூறு ஏற்பட்டது தனக்கு தெரியும் என்றது.
மேலும், நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் தொழில்நுட்ப கட்டமைப்பை அடிக்கடி சந்தேகப்படும்படியான அறிகுறிகள் ஏதும் தென்படுகின்றனவா என சோதித்துப் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியது.

