ஆசிய பெரும்பணக்காரர்கள் எண்ணிக்கை கடந்த 2023ஆம் ஆண்டு சாதனை அளவாக உயர்ந்துள்ளது.
அத்துடன், அவர்களின் சொத்து மதிப்பு 2022ஆம் ஆண்டு இறக்கம் கண்ட நிலையில் சென்ற ஆண்டு மீட்சி அடைந்ததாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்நிலையில், அந்தப் பணக்காரர்கள் தங்கள் சொத்துகளை இளைய தலைமுறையினருக்கு மாற்றிவிடும் போக்கு இடம்பெற்று வருவதாக சொத்து நிர்வாக சேவை வழங்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.
இதுபற்றி ஜூன் 5ஆம் தேதியிட்ட தனது அறிக்கையில் கூறும் கேப்கெமினி என்ற ஆலோசனை நிறுவனம், 2023ஆம் ஆண்டில் ஆசிய பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 4.2% கூடி அமெரிக்க டாலர் 25.7 டிரில்லியனை (S$ 34.7 டிரில்லியன்) எட்டியதாகக் கூறுகிறது.
இவர்களின் சொத்து 2022ஆம் ஆண்டில் 2.7% வீழ்ச்சியடைந்து அமெரிக்க டாலர் 24.7 டிரில்லியனாக இருந்ததாகவும் அந்த நிறுவனம் விளக்கியது.
அமெரிக்க டாலர் 1 மில்லியனோ அதற்கும் மேலாகவோ முதலீடு செய்யும் அளவுக்கு சொத்து வைத்திருப்போர் இந்த அதிக சொத்து மதிப்பு உள்ள நபர்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
சொத்து மதிப்பு 2022ஆம் ஆண்டு பங்குச் சந்தை வீழ்ச்சி, உயர்ந்து வட்டி விகிதம், பணவீக்கம், ரஷ்ய-உக்ரேன் போன்ற புவிசார் அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றால் வீழ்ச்சி கண்டன.
ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை 4.8% அதிகரித்து 7.4 மில்லியன் பேராக அதிரித்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது.

