பிடோக்கில் உள்ள நியூவாட்டர் வருகையாளர் நிலையம் ஜூலை 31ல் மூடப்படுகிறது

பிடோக்கில் உள்ள நியூவாட்டர் வருகையாளர் நிலையம் ஜூலை 31ல் மூடப்படுகிறது

1 mins read
f01d177a-861d-484c-87f9-f719932e3127
பிடோக்கில் உள்ள நியூவாட்டர் வருகையாளர் நிலையம். - படம்: பொதுப் பயனீட்டுக் கழகம்

பிடோக்கில் உள்ள நியூவாட்டர் வருகையாளர் நிலையம் ஜூலை மாதம் 31ஆம் தேதியுடன் மூடப்படுகிறது. இந்தத் தகவலைப் பொதுப் பயனீட்டுக் கழகம் வெளியிட்டது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீர் நீடித்த நிலைத்தன்மை தொடர்பாகப் பொதுமக்களுக்கு அந்த நிலையம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அந்த நிலையத்துக்கு 1.7 மில்லியனுக்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள், வெளிநாட்டினர் நேரில் சென்று நியூவாட்டர் பற்றி தெரிந்துகொண்டனர்.

பிடோக் மற்றும் கிராஞ்சி வட்டாரங்களில் நியூவாட்டர் ஆலைகள் முழுமையடைந்ததை அடுத்து, இந்த நியூவாட்டர் வருகையாளர் நிலையம் 2003ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

நியூவாட்டர் வருகையாளர் நிலையத்தில் தண்ணீர் எவ்வாறு மறுசுழற்சி செய்யப்படுகிறது, சுத்திகரிக்கப்பட்டு மிகவும் தூய்மையானதாக எப்படி விநியோகிக்கப்படுகிறது போன்றவை குறித்து இருவழித் தொடர்பு முறை, சுற்றுலாக்கள், கண்காட்சிகள், பயிலரங்குகள் ஆகியவை மூலம் பொதுமக்களுக்குக் காட்டப்பட்டது.

இந்த நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள பிடோக் நியூவாட்டர் ஆலை அதே ஆண்டில் திறக்கப்பட்டது. இதுவே சிங்கப்பூரின் ஆக பழைய நியூவாட்டர் உற்பத்தி ஆலை ஆகும்.

பிடோக் நியூவாட்டர் ஆலையும் ஜூலை மாதம் 31ஆம் தேதியன்று மூடப்படும் என்று கழகம் ஜூன் 24ஆம் தேதியன்று தெரிவித்தது.

பிடோக் நியூவாட்டர் ஆலைக்குப் பதிலாக சாங்கி நீர்ச் சுத்திகரிப்பு ஆலையில் சிங்கப்பூரின் மூன்றாவது நியூவாட்டர் ஆலை கட்டப்படுகிறது. இந்த ஆலை 2026ஆம் ஆண்டில் முழுமையடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்