அடிப்படைப் பணவீக்கம் 3.1%: மூன்று மாதமாக ஏற்ற இறக்கம் இல்லை

அடிப்படைப் பணவீக்கம் 3.1%: மூன்று மாதமாக ஏற்ற இறக்கம் இல்லை

2 mins read
791a7edf-fa5b-436a-82ec-92d8237db692
மே மாதம் சிங்கப்பூரர்களின் விடுமுறைச் செலவுகள் அதிகரித்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் தங்களது விடுமுறைப் பயணங்களுக்கு அதிகம் செலவழித்திருக்கும் நிலையில் மே மாத மூலாதாரப் பணவீக்கம் 3.1 விழுக்காடு என்று மாற்றமின்றி நிலைபெற்று உள்ளது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருந்து இதே நிலை தொடர்வதாக திங்கட்கிழமை (ஜூன் 24) வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவித்தன.

தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகளை நீக்கிவிட்டு குடும்பச் செலவுகளைக் கணக்கிடுவதே மூலாதாரப் பணவீக்கம்.

மே மாதம் விமானக் கட்டணங்கள் சிறிதாக இறங்கிய அதேநேரம் விடுமுறைச் செலவுகள் கடுமையாக அதிகரித்ததைத் தொடர்ந்து சேவைப் பணவீக்கம் 3.6 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.

இருப்பினும், அதனைச் சரிக்கட்டும் விதமாக அமைந்திருந்தது மின்சாரம், எரிவாயு, சில்லறை மற்றும் இதரப் பொருள்களுக்கான பணவீக்கம்.

உணவுப் பணவீக்கம் மாற்றமின்றி 2.8 விழுக்காடாகத் தொடர்ந்தது.

எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பணவீக்கம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த மே மாதம் 3.1 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.

அதேபோல, ஏப்ரலில் பதிவான 2.7 விழுக்காட்டைக் காட்டிலும் இது அதிகம். வாகனங்கள் மற்றும் பெட்ரோல் விலைகள் ஏறியதைத் தொடர்ந்து மே மாத ஒட்டுமொத்தப் பணவீக்கம் கூடியது.

பணவீக்கத்தின் மற்ற எல்லாப் பிரிவுகளைக் காட்டிலும் தனியார் போக்குவரத்துப் பிரிவுதான் ஆக அதிக ஏற்றம் கண்டது. ஆண்டுக்கு ஆண்டு என்னும் அடிப்படையில் அதன் விலைகள் 2.8 விழுக்காடு ஏற்றம் கண்டன.

கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விலைகளும் பெட்ரோல் விலையும் கிடுகிடுவென வேகமாக உயர்ந்ததன் விளைவு அந்த ஏற்றம். ஏப்ரலில் அந்த விலைகள் 0.3 விழுக்காடு மட்டுமே அதிகரித்து இருந்தன.

மாதத்திற்கு மாதம் என்னும் ஒப்பீட்டில் மே மாத மூலாதாரப் பணவீக்கம் 0.1 விழுக்காடும் ஒட்டுமொத்தப் பணவீக்கம் 0.7 விழுக்காடும் அதிகரித்தன.

விலைகள் இன்னும் எவ்வளவு ஏற்றம் காண்கின்றன என்பதை மாத ஒப்பீடு பிரதிபலிக்கிறது.

இதற்கிடையே, மூலாதாரப் பணவீக்கத்தில் காணப்படும் மிதமான போக்கு இவ்வாண்டின் எஞ்சிய பகுதியிலும் தொடரும் என்றும் நான்காம் காலாண்டில் இறங்குவதை அதிகம் உணரலாம் என்றும் வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் இணைந்து திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

குறிப்புச் சொற்கள்