புக்கிட் பாஞ்சாங் இலகு ரயிலின் (பிபிஎல்ஆர்டி) இருவழி சுற்றுச் சேவை ஜூன் 30ஆம் தேதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.00 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரையிலும் மாலை 5 மணியிலிருந்து இரவு 7 மணி வரையில் மீண்டும் தொடங்குகிறது.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயிலின் இதேபோன்ற நேரத்திலான ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் சனிக்கிழமைகளிலும் மீண்டும் தொடங்கியது.
இதற்கு முன்பு உச்ச நேரமில்லாத சமயங்களில் பெட்டிர் நிலையத்திலிருந்து சுவா சூ காங் வரை சேவை ‘பி’யில் ஒருவழி சேவை மட்டுமே வழங்கப்பட்டது. புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்குக் காரணம். ரயில் சேவையின் நம்பகத்தன்மையை மேம்படுத்த 2018ல் புதுப்பிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
வார இறுதி நாள்கள் ஒருபுறமிருக்க, இருவழி சுற்றுச் சேவை வாரநாள்களில் காலை, மாலைகளில் உச்ச நேரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஜூலை 1ஆம் தேதியிலிருந்து பிபிஎல்ஆர்டி சேவை இயங்கும் நேரம் வழக்கநிலைக்குத் திரும்பும்.

