முஸ்லிம் சட்டத்துக்கு முரணான கோட்பாடுகளைக் கற்பித்ததற்காக ஆடவர் ஒருவர் திங்கட்கிழமை (ஜூன் 24) நீதிமன்ற விசாரணைக்கு வந்தார்.
முகம்மது ரஸிஃப் ரடி எனப்படும் 66 வயது சிங்கப்பூரர் இஸ்லாமிய சமய போதகராகவோ குர்ஆன் கற்பிப்பவராகவோ அங்கீகரிக்கப்படவில்லை.
முஸ்லிம் சட்ட நிர்வாகத்தின்கீழ் புரிந்த ஒரு குற்றம் தொடர்பான விசாரணையில் ரஸிஃப் சார்பாக தற்காப்பு வழக்கறிஞர் முன்னிலை ஆனார்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை மூன்று பொய்யான போதனைகளை வழங்கியதாக ரஸிஃப் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சூதாட்டம் அனுமதிக்கப்படக்கூடும் என்றும் ஆணும் பெண்ணும் ஆன்மிக ரீதியில் மணம் புரிவது செல்லுபடியாகும் என்றும் தம்மால் நபியின் ஆன்மாவை வரவழைக்க முடியும் என்றும் அவர் தவறான கோட்பாடுகளைப் போதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத்தரப்புக்கும் தற்காப்புத் தரப்புக்கும் இடையில் பகிர்ந்துகொள்ளப்பட்ட உண்மை ஒப்புதல் அறிக்கையின்படி, கடந்த 2017ஆம் ஆண்டு 7 ஜாலான் பிசாங்கில் லினா’ஸ் கஃபே என்னும் உணவகத்தை பெண் ஒருவருடன் சேர்ந்து நிறுவினார்.
அந்த உணவகத்தில் பதிவு செய்யப்படாத சமயப் பள்ளி ஒன்றை ரஸிஃப் நடத்தி வந்ததாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.
2021 ஆகஸ்ட் 24ஆம் தேதி ரஸிஃப்புக்கு எதிராக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தான் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை முன்னதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மாவட்ட நீதிபதி ஷைஃபுதின் சருவான் முன்னிலையில் விசாரணை தொடர்கிறது.
சாட்சிகளின் விவரங்களை வெளியிட வேண்டாம் என உத்தரவிடுமாறு அரசுத் தரப்பும் தற்காப்புத் தரப்பும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தற்காப்புத் தரப்பு சாட்சியங்களின் விவரங்களை மறைப்பதற்கான கோரிக்கைக்கு அரசுத் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்தது.
முஸ்லிம் சட்டத்துக்கு முரணான போதனைகளைக் கற்பிக்கும் குற்றத்துக்கு 12 மாதம் வரையிலான சிறைத் தண்டனையும் $2,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.