தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையர்களை மையப்படுத்தும் ‘என்டியுசி பே’ கொண்டாட்டங்கள்

3 mins read
c7bda0b9-004d-4077-ade6-2c418540627c
ஆகஸ்ட் 9ஆம் தேதி நடக்கும் ‘என்டியுசி பே’ கொண்டாட்டம் மற்றும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடக்கும் முன்னோட்ட நிகழ்ச்சியில் கண்ணைப் பறிக்கும் வாணவேடிக்கைகளை எதிர்பார்க்கலாம். - படம்: தேசிய தின அணிவகுப்பு 2024 செயற்குழு
multi-img1 of 3

இவ்வாண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதியும் 9ஆம் தேதியும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை, ‘புரோமோன்டரி@மரினா பே’வில் நடைபெறும் இரு தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வுகளை கிட்டத்தட்ட 15,000 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் கண்டுகளிக்கவுள்ளனர்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி நடக்கும் முன்னோட்ட நிகழ்வும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடக்கும் ‘என்டியுசி பே’ கொண்டாட்டமும் இடம்பெறவுள்ளன.

அவற்றுக்கான நுழைவுச்சீட்டுகளுக்கு சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் ஜூன் 24 முதல் ஜூலை 8 நண்பகல் 12 மணி வரை https://ndpbaycelebrations.sg இணையத்தளம்வழி விண்ணப்பிக்கலாம். ஆளுக்கு இரு நுழைவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.

அவற்றின் முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி மின்னஞ்சல்வழி அறிவிக்கப்படும். நுழைவுச்சீட்டுகளை ஜூலை 19 முதல் 21ஆம் தேதி வரை ‘கிரேட் வோர்ல்டு’ பேரங்காடி தரைத்தளத்திலுள்ள ஏட்ரியத்தில் பெறலாம்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் முதன்முறையாக என்டியுசி, புரோமோன்டரியில் பெரிய அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கொண்டாட்டங்களுக்கான கதவுகள் பிற்பகல் 3 மணிக்குத் திறக்கும்.

கண்கவர் ராணுவ அங்கங்கள்

தேசியக் கொடியைப் பறக்கவிட்டபடி ‘சிஎச்-47எஃப் சினூக்’ ஹெலிகாப்டர்கள்.
தேசியக் கொடியைப் பறக்கவிட்டபடி ‘சிஎச்-47எஃப் சினூக்’ ஹெலிகாப்டர்கள். - படம்: தேசிய தின அணிவகுப்பு 2024 செயற்குழு

புரோமோன்டரியில் இருந்தபடியே சிங்கப்பூர் ஆயுதப்படையின் அங்கங்களைக் கண்டு ரசிக்கலாம்.

‘செஞ்சிங்கங்கள்’ (Red Lions) வானத்திலிருந்து குதிப்பது, தேசியக் கொடியோடு ‘சிஎச்-47எஸ்டி/எஃப் சினூக்’ ஹெலிகாப்டர்கள் பறப்பது, சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படை எஃப்-16 போர்விமானங்களின் வான்சாகசம், வாணவேடிக்கை உள்ளிட்ட பலவற்றையும் மக்கள் கண்டு மகிழலாம்.

தேசிய தின அணிவகுப்பின் நேரடி ஒளிபரப்பையும் பெரிய திரைகளில் காணலாம்.

தேசிய தின அணிவகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோடு ‘புரோமோன்டரி’யிலும் நாட்டுப் பற்றுறுதி எடுக்கலாம்.

அனைவரையும் ஈடுபடுத்தும் சிறப்பு அங்கங்கள்

உள்ளூர்ப் பிரபலங்கள் யங் ராஜா, இமான் ஃபாண்டி, 53ஏ போன்றோரும் நிகழ்ச்சி படைக்கவுள்ளனர்.

‘ஓர் இதயத்துடிப்பு’ எனும் அங்கத்தில், உள்ளூர்க் கலைஞர்கள் ‘இல்லம்’ எனும் தேசிய தினப் பாடலைப் பாடும்போது மக்களும் சேர்ந்து பாட ஊக்குவிக்கப்படுவர். பாடலுக்கேற்ப, அவர்களுக்கு வழங்கப்பட்ட கைப்பட்டைகள் அனைத்தும் ஒருசேர செவ்வொளியை உமிழும்.

ஜூன் 24 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறும் ‘இளையர் இதயத்துடிப்பு’ புகைப்படச் சவாலில் இளையர்கள் பங்குபெறலாம். இதயம் போன்ற சைகைகளோடு புகைப்படங்கள் எடுத்து https://www.ndpbaycelebrations.sg/ இணையத்தளத்திற்கு அனுப்பவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களோடு அமைக்கப்பட்ட காணொளி, ‘ஓர் இதயத்துடிப்பு’ அங்கத்தில் ஒளிபரப்பப்படும். புத்தாக்கமிக்க 10 புகைப்படங்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

‘உறவுப்பிணைப்புகள்’ சாவடியில் மக்கள் சிங்கப்பூருக்கான தம் எதிர்கால ஆசைகளை அட்டைகளில் எழுதி, சிவப்பு நாடாக்களில் கட்டித் தொங்கவிடலாம்.

புகைப்படச் சாவடி, ‘நினைவுத்தடங்கள்’, ‘என்டியுசி கேர்ஸ்’ முதலான சாவடிகளும் இடம்பெறும்.

வந்திருப்போர் அனைவருக்கும் சிறப்புத் தேவை மாணவர்கள் வடிவமைத்த தேசிய தின அன்பளிப்புப் பைகள் வழங்கப்படும்.

இளையர்களின் பங்கேற்பு

(இடமிருந்து) ரிஷ்மா திரு, 28, ஃபர்சானா ஷஃப்ரின், 21
(இடமிருந்து) ரிஷ்மா திரு, 28, ஃபர்சானா ஷஃப்ரின், 21 - படம்: ரவி சிங்காரம்

‘டிபிஎஸ்’ வங்கியின் வேலை அனுமதிச்சீட்டுப் பிரிவில் வணிக மேலாளராகக் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் ரிஷ்மா திரு, 28, மூன்றாம் ஆண்டாக தேசிய தின அணிவகுப்பில் அணிவகுத்து நடக்கவுள்ளார்.

முதலில் ‘டிபிஎஸ்’ தொழிலாளர் சங்க அணிவகுப்பு அணியில் சேர்ந்த அவர், சென்ற ஆண்டு என்டியுசி அணிவகுப்பில் இணைந்தார்.

என்டியுசி அணிவகுப்பு அணியில் சென்ற ஆண்டு கொடியை ஏந்திய அவர், இவ்வாண்டு அதன் இணைத் தளபதியாக அதிபருக்கு மரியாதை செலுத்துவார்.

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் ஃபர்சானா ஷஃப்ரின், 21, தன் பள்ளியின் மூலம் ‘பே’ கொண்டாட்டங்கள் இளையர் ஏற்பாட்டுக் குழுவிற்கு நியமிக்கப்பட்டார். ‘இளையர் இதயத்துடிப்பு’ சவாலை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

“அனைத்து சிங்கப்பூரர்களும் ஒருவர்மீது ஒருவர் அக்கறைகொண்டு, மேலும் அன்பான சமுதாயம் உருவாகவேண்டும் என்பதே என் கனவு,” என்றார் ஃபர்சானா.

குறிப்புச் சொற்கள்