பூன் கெங்கில் சாலைத்தடுப்பைத் தவிர்த்ததாக நம்பப்படும் வாடகை கார் ஓட்டுநர் ஒருவரும் அந்த காரில் இருந்த மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.
திங்கட்கிழமை (ஜூன் 24) விடியற்காலை 4.55 மணியளவில் வாம்போ ஈஸ்ட்டில் தனது அதிகாரிகள் சாலைத் தடுப்பில் ஈடுபட்டு இருந்ததாகக் காவல்துறை கூறியது.
அப்போது அங்கு வந்த கார் ஒன்று சாலைத் தடுப்புப் பகுதியில் நின்றதும் பின்னோக்கிச் செலுத்தப்பட்டது.
பின்னர், பூன் கெங் ரோட்டில் அந்த காரை நிறுத்தி விட்டு மூவரும் அங்கிருந்து சென்றதாகவும் அது தெரிவித்தது.
பின்னர் 30 வயது கார் ஓட்டுநர், சாலைத் தடுப்பைத் தவிர்த்ததற்காகவும் போதைப்பொருள் உட்கொண்டு இருந்த சந்தேகத்திற்காகவும் கைது செய்யப்பட்டார்.
காரில் பயணம் செய்த 18 வயது ஆடவரும் 15 வயதுப் பெண்ணும் போதை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்தப் பெண் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.
மூவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்ட சந்தேகம் இருப்பதால் அதுபற்றி மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் குறித்து ஜாலான் புசார் குழுத்தொகுதி எம்.பி. ஹெங் சீ ஹாவ் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கையில், காவல்துறை துரத்தியபோது பூன் கெங் ரோட்டின் சாலையோர நடைபாதையில் ஏறிய வாடகை கார் அங்கிருந்த புல் தரையில் நிறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

