தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஷ்ரமத்தில் யோகா தினக் கொண்டாட்டம்

2 mins read
dad118d4-28f3-43dd-b7ed-89f1a8206583
யோகப் பயிற்சியை வழிநடத்தும் திரு ஜீவன். - படம்: த. கவி

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்தி, அவர்கள் மறுவாழ்வு பெற்று சமுதாயத்திற்குள் மீண்டும் ஒருங்கிணைக்க இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆஷ்ரம் எனும் இடைநிலை மறுவாழ்வு இல்லம் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

இல்லத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கென பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று, யோகா வகுப்புகள்.

யோகா, தியானம் என இரண்டையும் கருவிகளாகப் பயன்படுத்தி, இல்லவாசிகள் மறுவாழ்வுக்குத் தயார்ப்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை (ஜூன் 21) உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆஷ்ரம் வளாகத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி இடம்பெற்றது.

யோகக்கலையின் சிறப்பைப் போற்றும் வகையில் ஆஷ்ரமத்தில் யோகா அமர்வு நடைபெற்றது. ஆஷ்ரமவாசிகள், அவர்களின் குடும்பத்தினர், யோகாவில் ஆர்வம் உள்ளவர்கள் என பலதரப்பட்டவர்கள் ஒரு மணி நேர யோகப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆஷ்ரமத்தில் முழுநேர யோகா பயிற்றுவிப்பாளராக இருக்கும் திரு கே ஆர் ஜீவன், 53, யோகப் பயிற்சி அமர்வை வழிநடத்தினார். அமர்வில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு ஆசனங்களில் ஈடுபட்டு, தங்களை உடலளவிலும் மனத்தளவிலும் தளர்த்திக்கொண்டனர்.

கடந்த 25 ஆண்டுகளாக யோகப்பயிற்சியில் ஈடுபாடு காட்டி வரும் திரு ஜீவன், அக்கலையால் மட்டுமே ஒருவரின் மனத்தையும் உடலையும் இணைக்க முடியும் என்று நம்புகிறார்.

“யோகா ஒருவரின் சிந்தையைத் தெளிவுபடுத்தும்; கவனத்துடன் செயல்பட உதவும். இது கைவிடப்படும்போது சிலர் தவறான பாதையில் சென்று விடுவார்கள்,” என்றார் அவர்.

இல்லவாசிகள்கள் முழுக் கவனம் செலுத்தி யோகாவில் முழுமூச்சுடன் இறங்கினால் அதற்கான பலனும் விரைந்து கிட்டும் என்கிறார் திரு ஜீவன்.

“போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் மனவோட்டத்தை அறிந்து, அவர்களுடன் இணைந்து யோகா செய்தால் அவர்களை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக நான் இப்பாதையைத் தேர்ந்தெடுத்தேன்,” என்று அவர் சொன்னார்.

ஆஷ்ரம் இல்லவாசியான திரு தேவன்,(உண்மைப் பெயரன்று) “யோகப் பயிற்சி எனக்கு தன்னம்பிக்கையையும் உடல்நலத்தையும் அளித்தது. ஆன்மிகப் பயிற்சியாகப் பார்க்காமல் போதைப் பழக்கத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்வதற்கான கருவியாக நான் யோகாவைப் பார்க்கத் தொடங்கினேன். யோகா செய்ய செய்ய உடலும் மனமும் வலுவடைந்தன,” என்றார்.

குறிப்புச் சொற்கள்