$90,000 ரொக்கத்தைக் கையாடிய காவல்துறை அதிகாரி

$90,000 ரொக்கத்தைக் கையாடிய காவல்துறை அதிகாரி

2 mins read
f1afac66-e1e2-41ca-82a2-81beb4b4c808
முகம்மது டானியல் முகம்மது நஸாலி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் காவல்துறையில் ஸ்டாஃப் சார்ஜண்ட் பதவியை வகித்த மூத்த அதிகாரி ஒருவர் தன்னிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட 90,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைக் கையாடல் செய்திருக்கிறார்.

முகம்மது டானியல் முகம்மது நஸாலி எனும் அந்த ஆடவர் 2017க்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் குற்றங்களைப் புரிந்தார்.

டானியல் கையாடிய தொகை, அந்தக் காலகட்டத்தில் அவர் கையாண்ட 24 விவகாரங்களுடன் தொடர்புடையது. குற்றங்களைப் புரிந்தபோது அவர் பிடோக் காவல்துறைப் பிரிவில் மூத்த விசாரணை அதிகாரி யாக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது சிங்கப்பூர் காவல் துறையின் பொது விசாரணைக் குழுவுக்கான துணைத் தலைமை அதிகாரியாகவும் அவர் பதவி வகித்தார்.

விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைத் தானே வைத்துக்கொள்வதுதான் டானியல் செயல்பட்ட விதமாக இருந்தது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் எமிலி கோ நீதிமன்றத்தில் தெரிவித்தார். கடனை அடைப்பது, சூதாட்டம் போன்ற தனது சொந்தச் செலவுக்காக அவ்வாறு பெற்ற பணத்தை டானியல் பயன்படுத்தினார் என்று திருவாட்டி கோ குறிப்பிட்டார்.

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட 34 வயது டானியல், நம்பிக்கை துரோகம் இழைத்ததாகச் சுமத்தப்பட்ட எட்டுக் குற்றச்சாட்டு களையும் போலி ஆவணம் தயாரித்ததாகச் சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 25) ஒப்புக்கொண்டார்.

ஜூலை மாதம் 23ஆம் தேதி டானியல் வழக்கில் தீர்ப்பளிக்கப்படும். அப்போது மேலும் 28 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்படும்.

டானியல், 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் காவல்துறையில் சேர்ந்ததாக அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் கோ தெரிவித்தார். விசாரணை அதிகாரியாக இருந்தபோது டானியல், குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுபாதிக்கப்பட்டோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு பணத்தைப் பெற்று அதை பாதிக்கப்பட்டோரிடம் கொடுத்த பிறகு டானியல் அதுதொடர்பான விவரங்கள் அடங் கிய காவல்துறைக் குறிப்பு ஒன்றைத் தயாரிக்க வேண்டும். அவர் பணத்தை ஒப்படைத்ததற்கான ஆதாரம் அது. ஆனால், அவ்வாறு செய்யாமல் அவர் பணத்தை வைத்துக்கொண்டு தனது நடவடிக்கைகளை மறைப்பதற்காகப் போலியான குறிப்புகளைத் தயார்செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்