மக்கள் செயல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மலாய்/முஸ்லிம் சமூகத் தலைவருமான திரு முகம்மது மைதின் பக்கிர் முகம்மது ஜூன் 24ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 66.
திரு முகம்மது மைதின் பக்கிர், 1991 முதல் 2006ஆம் ஆண்டு வரை அல்ஜுனிட் மற்றும் மரின் பரேட் குழுத் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியதுடன் முன்னைய தகவல், கலைகள் அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராகவும் பின்னர் உள்துறை, கல்வி, சுற்றுப்புற அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
திரு மைதினின் துணைவியார் திருவாட்டி ரஹிமா அஸ்மோருக்கு ஜூன் 25ஆம் தேதி எழுதிய இரங்கல் கடிதத்தில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், “மலாய்/முஸ்லிம் சமூகத்துடன் திரு மைதின் கொண்டிருந்த ஆழ்ந்த தொடர்பு அவரை அச்சமூகத்தின் மற்றும் தேசிய அளவிலான விவகாரங்களில் ஒரு நல்ல ஆலோசகராக மிளிர வைத்தது,” என்றார்.
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு மைதினின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். 1997 முதல் 2003 வரை கல்வி அமைச்சராக இருந்த திரு டியோ, “கல்வி அமைச்சில் நானும் மைதினும் பணியாற்றினோம். திரு மைதின் நமது பள்ளிகளில் பெற்றோர் ஆதரவுக் குழுக்களை அமைக்கும் திட்டத்தை முன்வைத்து அதை செயல்படுத்தினார்,” என்றார்.
ஊடகத்துறையில் தமது பணியைத் தொடங்கிய திரு மைதின், பெரித்தா ஹரியான், பெரித்தா மிங்கு மலாய் நாளிதழ்களின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1990ல் அப்போதைய பிரதமர் கோ சோக் டோங்கின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு மைதின், 1991 பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
கேலாங் சிராய் புத்துணர்ச்சி பெற்றதில் திரு மைதின் பங்காற்றியதாகக் குறிப்பிட்ட மூத்த அமைச்சர் லீ, அவருக்குப் பின் வந்த மலாய்/முஸ்லிம் தலைவர்கள் அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து நடத்தினர் என்றார்.

