சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி மே மாதத்தில் நம்பிக்கையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.
மின்னியல் துறை மீட்சியடைந்ததால் ஒட்டுமொத்த தொழிற்சாலை உற்பத்தியும் கூடியுள்ளது.
ஆண்டு அடிப்படையில் மே மாதத்தில் மொத்த உற்பத்தி எதிர்பார்த்ததைவிட 2.9 விழுக்காடு அதிகரித்தது.
புளூம்பெர்க் ஆய்வில் தொழிற்சாலை உற்பத்தி 1.4 விழுக்காடு விரிவடையும் என்று பொருளியல் நிபுணர்கள் தங்களுடைய எதிர்பார்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.
அதிக ஏற்ற இறக்கமாக இருக்கும் உயிர்மருத்துவ துறையைத் தவிர்த்தால் உற்பத்தி 10.1 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக பொருளியல் மேம்பாட்டுக் கழகம் ஜூன் 26ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதே மே மாதத்தில் மாத அடிப்படையில் உற்பத்தி 1.1 விழுக்காடு உயர்வு கண்டது. உயிர்மருத்துவ துறையைத் தவிர்த்தால் இந்த உயர்வு 7.7 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரின் மொத்த தொழிற்சாலை உற்பத்தியில் பாதியளவு பங்கை வகிக்கும் மின்னியல் துறை ஆண்டு அடிப்படையில் 20.1 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. ஏப்ரலில் 1.1 விழுக்காடு குறைந்த பிறகு இத்துறை மீண்டு வந்துள்ளது.
மின்னியல் துறைக்குள் பகுதிமின்கடத்தி மட்டும் சிங்கப்பூரின் மொத்த தொழிற்சாலை உற்பத்தியில் ஏறக்குறைய 41 விழுக்காடு பங்கை வகிக்கிறது. இது, ஏறக்குறைய 20.6 விழுக்காடு உற்பத்தி உயர்வைப் பதிவு செய்துள்ளது. இத்துறையில் இதர துறைகளில் தேவை, வழக்க நிலைக்குத் திரும்பியதால் 30.2 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. கணினி, உதிரிபாகங்கள் மற்றும் தரவுச் சேமிப்பு உள்ளடங்கிய துறை 24.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. தகவல், தொடர்பும், பயனீட்டாளர் மின்னியல் உற்பத்தியும் மேலும் ஏழு விழுக்காடு கூடியது.
தொடர்புடைய செய்திகள்
இவற்றுக்கு மாறாக உயிர்மருத்துவத் துறை மே மாதத்தில் மிக மோசமாகச் செயல்பட்டது. ஆண்டு அடிப்படையில் இதன் உற்பத்தி 42.6 விழுக்காடு சரிந்தது.
2023ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிட்டால் போக்குவரத்து பொறியியல் துறை இவ்வாண்டு மே மாதத்தில் 7.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
விமானப் பாகங்கள் மற்றும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு போன்றவற்றுக்கான தேவை அதிகரித்ததால் விமானத் துறை 6.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.

