பொதுவான விநியோகச் சிரமங்களைத் தீர்க்க முத்தரப்பு மூலம் முயற்சி

பொதுவான விநியோகச் சிரமங்களைத் தீர்க்க முத்தரப்பு மூலம் முயற்சி

2 mins read
5d4a9026-8461-4541-aec9-99055b5aa689
கருத்தாய்வுகளில் மொத்தம் 2,000 விநியோக ஊழியர்கள் பங்கெடுத்தனர். - படம்: பிக்சாபே

கூட்டுரிமை வீடுகளுக்கு உணவு அனுப்பும்போது மழை பெய்தால் தாமும் தாம் கொண்டுசெல்லும் உணவும் நனையும் சாத்தியம் அதிகம் என்று ‘ஃபூட்பாண்டா’ ஓட்டுநர் கீத் ஒங் கூறுகிறார்.

கூட்டுரிமைக் கட்டடங்களின் விதிமுறைகளால், 57 வயதான அவர் பெரும்பாலான நேரங்களில் தமது மின்சார சைக்கிளை வெளியில் நிறுத்திவிட்டு, மழையில் நனைந்துகொண்டே உள்ளே செல்லவேண்டும்.

மற்றொருவரான திரு இங் கான் போ, 33, எட்டு ஆண்டுகளாக உணவு விநியோகித்து வருகிறார். ஆர்ச்சர்ட் சாலைக்கோ மத்திய வர்த்தக வட்டாரத்திற்கோ சென்றால், வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணங்களைச் செலுத்தவேண்டும் என்றார் அவர்.

அண்மையில் நடத்தப்பட்ட மூன்று கருத்தாய்வுகளில் அடையாளம் காணப்பட்ட சிரமங்களில் இவையும் அடங்கும்.

அந்தக் கருத்தாய்வுகளில் மொத்தம் 2,000 விநியோக ஊழியர்கள் பங்கெடுத்தனர்.

தீவு முழுதும் உள்ள 416 கூட்டுரிமைக் கட்டடங்கள், 153 பேரங்காடிகள், 112 அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றில் சந்தித்த சிரமங்களைப் பற்றி அவர்கள் கருத்தாய்வில் பகிர்ந்துகொண்டனர்.

நகர மறுசீரமைப்பு ஆணையமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் வழிநடத்திய முத்தரப்புப் பணிக்குழு, டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை கருத்தாய்வுகளை மேற்கொண்டது.

அந்தப் பணிக்குழு 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுவப்பட்டது.

இங்குள்ள விநியோகச் செயல்முறையின் இறுதிக் கட்டத்தை மேலும் பாதுகாப்பாகவும் செயல்திறன்மிக்கதாகவும் அமைக்க அந்தப் பணிக்குழு நிறுவப்பட்டது.

தொழிலாளர் இயக்கம், தொழில்துறைச் சங்கங்கள், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பணிக்குழுவில் அடங்குவர். கருத்தாய்வுகளிலிருந்து கிடைத்த புரிதலைக் கொண்டு, உத்தேசத் தீர்வுகளைக் கண்டறிய அவர்கள் தொடர் கலந்தாலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

அந்தத் தீர்வுகளை அதிகமானோர் கடைப்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில், 2024 இறுதியில் நடைபெறவிருக்கும் கண்காட்சி ஒன்றில் அவை வெளிப்படுத்தப்படும்.

விநியோக ஊழியர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான நேரத்தை நீட்டிப்பது, பொட்டலங்களைப் பெறுவதற்குப் பொதுவான பெட்டகங்களைப் பொருத்துவது போன்றவை, ஆராயப்படும் உத்தேசத் தீர்வுகளில் அடங்கும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்