தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாவிளக்கு செய்யக் கற்றுத் தந்த பயிலரங்கு

2 mins read
6fe1de7e-79f1-4476-bee4-fb8135c492d5
மாவிளக்கு செய்து காட்டும் திருவாட்டி தமிழ்ச்செல்வியுடன் பங்கேற்பாளர்கள். - படம்: த. கவி

காலங்காலமாகத் தொடர்ந்து வரும் தமிழரின் வழிபாட்டு முறைகளில் ஒன்றான மாவிளக்கு ஏற்றுவதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பயிலரங்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி நடைபெற்றது.

ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற இப்பயிலரங்கில் குடும்பத்தினர், குழந்தைகளுடன் 30 பெண்கள் கலந்துகொண்டனர்.

முதலில் மாவிளக்கு ஏற்றுதலின் முக்கியத்துவம் குறித்தும், பயன்படுத்தப்படும் பொருள்கள், அவை எவற்றைக் குறிக்கின்றன, மாவிளக்கு ஏற்ற உகந்த நாள்கள் உள்ளிட்ட தகவல்கள் பகிரப்பட்டன.

ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இக்கோவிலில் தொண்டூழியம் செய்துவரும் திருவாட்டி தமிழ்ச்செல்வி முதலில் மாவிளக்கு செய்து காட்டினார்.

தொடர்ந்து பங்கேற்பாளர்களுக்கு மாவிளக்கு செய்யத் தேவையான பொருள்கள் கொடுக்கப்பட்டன. தொண்டூழியர்களின் உதவியுடன் அவர்கள் செய்த மாவிளக்குகளை ஏற்றி மாரியம்மனை வழிபட்டனர்.

தனக்குத் தெரிந்த ஒன்றைப் பலருக்குத் தெரியப்படுத்தும் வாய்ப்பு கிட்டியதில் மிக்க மகிழ்ச்சியடைந்ததாகச் சொன்னார் பயிலரங்கை வழிநடத்திய தொண்டூழியர் தமிழ்ச்செல்வி.

தாங்கள் செய்த மாவிளக்கை ஏற்றி அம்மனை வழிபட்ட பங்கேற்பாளர்கள்.
தாங்கள் செய்த மாவிளக்கை ஏற்றி அம்மனை வழிபட்ட பங்கேற்பாளர்கள். - படம்: த. கவி

மாவிளக்கு ஏற்றும் பழக்கம் தொடர்ந்தாலும் தற்போது பெரும்பாலோர் கோவிலிலேயே அதனை வாங்கி ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் மாவிளக்கு செய்யும் வழிமுறை யாருக்கும் தெரியாமல் போய்விடும் எனும் கவலையின் வெளிப்பாடுதான் இப்பயிலரங்கு என்றார் இக்கோவிலின் நிர்வாகக் குழு உறுப்பினர் சாந்தினி.

இளம்பெண்களும், சிறுமிகளுடன் தாயாரும் இணைந்து இப்பயிலரங்கில் கலந்துகொண்டது அதன் வெற்றி என்றார் திருவாட்டி சாந்தினி.

தம் தாயார் மாவிளக்கு செய்வதைப் பார்த்திருந்தாலும், தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு இது என்று சொல்லும் நிதித் துறை ஊழியர் நிவேதிதா,35, தனது ஒன்பது வயது மக்கள் தீக்ஷாவுக்கு கலாசாரக் கூறுகளை அறிமுகம் செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி என்றார்.

இப்பயிலரங்கின் வழிகாட்டுதல்படி மாவிளக்கேற்றியது தனது நாளை தெய்வீகமாக்கியதாக உணர்ந்ததாகக் கூறினார் அரசு ஊழியர் கௌரி குணசேகரன், 38.

குறிப்புச் சொற்கள்