கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பெயினில் கொல்லப்பட்ட சிங்கப்பூரரான ஆட்ரி ஃபாங், அவரைக் கொன்றதாக நம்பப்படுபவருடன் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
மிட்செல் ஓங் எனப்படும் அந்த சந்தேக நபரை சமூக ஊடகத்தில் சந்தித்து அவருடன் திருவாட்டி ஃபாங் காதல் வயப்பட்டு இருந்ததாக சிங்கப்பூரில் உள்ள ஃபாங்கின் இரு நண்பர்கள் ஸ்பெயின் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் இருந்து புதன்கிழமை (ஜூன் 26) காணொளி வாயிலாக அவர்கள் அளித்த சாட்சியம் மொழிபெயர்க்கப்பட்டது.
ஓங்கும் திருவாட்டி ஃபாங்கும் 2014ஆம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் அறிந்திருந்ததாகவும் அவர்களுக்கு இடையிலான உறவு சேருவதும் பிரிவுதுமாக இருந்தது என்றும் சாட்சியங்கள் கூறியதாக ஸ்பொனிய ஊடகமான லா வெர்டாட் வியாழக்கிழமை (ஜூன் 27) தெரிவித்தது.
சாட்சியம் அளித்த இரு நண்பர்களின் அடையாளத்தையும் வெளியிட அனுமதி இல்லை.
கடந்த 2015ஆம் ஆண்டு ஏஐஏ காப்பீட்டு நிறுவன முகவராக ஓங் வேலை செய்தபோது 43 வயது சிங்கப்பூரரான திருவாட்டி ஃபாங் தமக்குச் சொந்தமான முதலீட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு சொத்துகளை விற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 10ஆம் தேதி ஸ்பெயினில் உள்ள அபனில்லா நகரில் லாரிகள் நிறுத்தும் இடம் அருகே திருவாட்டி ஃபாங் கத்திக்குத்துக் காயங்களுடன் காணப்பட்டார். அவரது உடலில் 30 கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் உயிரிழந்தார்.
ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஓங் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஸ்பெயினின் தேசிய காவல்துறை படையின் ஒன்றான சிவில் கார்ட், ஃபாங்கின் கொலைக்கு ‘பொருளியல்’ நோக்கம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்துகிறது.
$498,000 மதிப்புள்ளதாக நம்பப்படும் மத்திய சேம நிதியின் ஒற்றைப் பயனாளி வாரிசுதாரராக ஓங் நியமிக்கப்பட்டு இருந்த விவரமும் தெரிய வந்துள்ளது.

