சிங்கப்பூரின் ஆணிவேராக இருக்கும் ஒற்றுமை, பன்முகத்தன்மை, ஒட்டுமொத்த வலிமை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சியாக இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
பன்னிரண்டு முழுநேரக் கலைஞர்களுடன் 3,000 துணைக் கலைஞர்கள் இணைந்து படைக்கும் 59வது தேசிய தின அணிவகுப்பில் இளையர்களை மையப்படுத்தும் கலை அங்கங்கள் இடம்பெறுகின்றன.
பார்வையாளர்களும் மக்களும் சேர்ந்து பாடும் வகையில் நாட்டுப் பற்றுப் பாடல்கள் அங்கமும் இடம்பெறவுள்ளதாக ‘தி வொர்க்ஸ்பேஸ்’ மேடை நிகழ்ச்சி அரங்கில் வியாழக்கிழமை (ஜூன் 27) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அணிவகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பாடாங்கில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறவுள்ள அணிவகுப்பில் பல வண்ணங்களில் மின்னும் 12 ‘எல்இடி’ ஒளித்திரைகளும் நகரக்கூடிய நான்கு ‘எல்இடி’ கனச்சதுரங்களும் அமைக்கப்பட உள்ளன.
ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் நடைபெறவுள்ள கலை அங்கத்தில், நேரடி நிகழ்ச்சிகளுடன், நாட்டுப்பற்றையும் சமூக உணர்வையும் போற்றும் குறும்பட அங்கங்களையும் இந்த ஆண்டு அணிவகுப்பில் கண்டு ரசிக்கலாம்.
சிங்கப்பூரின் வரலாறு, பண்புகள், எதிர்காலம் தொடர்பில் நான்கு அத்தியாயங்களாக தேசிய தின அணிவகுப்பின் கலைநிகழ்ச்சி அங்கம் “ஒன்றாய் ஒன்றுபட்ட மக்களாய்” என்ற கருப்பொருளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முன்னோடிகளின் அசையா உறுதியை முதல் அங்கம் உணர்ச்சிகரமாக காட்டும்.
அதற்கு அடுத்த அங்கம் சிங்கப்பூரின் உணவு பன்முகத்தன்மை பற்றியது.
தொடர்புடைய செய்திகள்
சமூகத்தின் பரிவுமிக்கதன்மையும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் மூன்றாவது, நான்காவது அங்கங்களாக இடம்பெறுகின்றன.
ஓவ்வோரு அங்கத்திலும் அதன் கருப்பொருளை ஒட்டிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
ஜோக்கிம் கோமெஸ், சோனியா சியூ, எபி ஷங்கரா, சித்தி கலிஜா ஆகியோர் இந்நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளனர்.
சிங்கப்பூர் உணர்வையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் மறக்கமுடியாத கொண்டாட்டமாக இந்த அணிவகுப்பு திகழும் என்று அணிவகுப்பின் படைப்பாக்க இயக்குநர் பிரையன் கோத்தோங் டான், 44, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“அணிவகுப்பின் ஒவ்வோர் அங்கமும் மக்களை ஈர்த்து, ஈடுபடுத்தி உற்சாகப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்ற, தாம் வடிவமைக்கும் மிகப் பெரிய நிகழ்ச்சி இது என்றார்.
புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள மூன்று பாடல்கள் இந்த அணிவகுப்பில் சேர்க்கப்படுகின்றன. கேய்லின் டான் எழுதிய ‘ஹோல் அப் தி ஸ்கை’ பாடலை அம்னி முஸ்ஃபிரா பாடவுள்ளார். ‘ஹொரைஸன்’ என்ற அடுத்த பாடலை வெய்ஷ் பாடவிருக்கிறார்.
இவற்றுடன், ‘நாட் அலோன்’ என்ற இந்த அணிவகுப்பின் கருப்பொருள் பாடலை பெஞ்சமின் கேங்கும் ஈவன் லோவும் கலைநிகழ்ச்சி அங்கத்தின் இறுதி அங்கத்தில் பாடவுள்ளனர்.
தேசிய தின அணிவகுப்பில் ‘அன்று வந்ததும் இதே நிலா’
‘பெரிய இடத்துப் பெண்’ என்ற பழைய தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெறும் ‘அன்று வந்ததும் இதே நிலா’ பாடலை உள்ளூர் ஆங்கிலப் பாடகர் ஷாஸா பாடவிருக்கிறார்.
இன்ஸ்டகிராம், டிக்டாக் தளங்களில் அவரது பாடல் காணொளிகள் வேகமாகப் பரவியதை அடுத்து ஈராண்டுகளில் பிரபலம் அடைந்த ஷாஸா, தேசிய தின அணிவகுப்பில் முதன்முறையாகப் பாடுகிறார்.
தேசிய தின அணிவகுப்பில் தமிழ்ப் பாடல் பாடுவதை எண்ணி மகிழ்வதாக ஷாஸா கூறினார்.
மலையாளம் பேசும் குடும்பத்தில் வளர்ந்த இவர், பள்ளியில் மலாய் மொழியை இரண்டாவது மொழியாகப் படித்தார்.
“என்னால் தமிழில் சரளமாகப் பேச முடியாது. இருந்தபோதும், வயதானவர்கள் விரும்பிக் கேட்கும் இந்தப் பாடலைப் பிழையின்றி பாட ஆசைப்படுகிறேன். தமிழ் நன்கு பேசத் தெரிந்த என் அப்பாவை ஒத்திகைகளுக்கு வந்து என் உச்சரிப்பைச் சரிபார்த்தார்,” என்று ஷாஸா கூறினார்.
இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஷாஸா, பல்வேறு சிறுபான்மைச் சமூகங்களை ஒருசேர பிரதிபலிக்க முடிவதை எண்ணி மகிழ்வதாகக் கூறினார்.
“என் மரபுக்கும் கலாசாரத்துக்கும் மரியாதை தரும் வாய்ப்பாக இதைக் கருதுகிறேன்,” என்று மகிழ்ந்தார் ஷாஸா.