குடியிருப்புகளை நிர்வகிப்பதில் சிங்கப்பூரில் உள்ள எல்லா நகர மன்றங்களும் உயர்ந்த தரநிலையைப் பெற்று உள்ளன.
தேசிய வளர்ச்சி அமைச்சு வியாழக்கிழமை (ஜூன் 27) வெளியிட்ட நகர மன்ற நிர்வாக அறிக்கையில் இந்த விவரம் தெரியவந்து உள்ளது.
நகர மன்றங்களின் தரத்தை மதிப்பிட்டு இதுபோல அறிக்கை வெளியிடும் முறை 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இங்குள்ள 17 நகர மன்றங்களும் உயர்தரத்தைப் பெற்று இருப்பது இதுவே முதல்முறை.
ஆண்டுதோறும் நகர மன்றங்களின் தரத்தை மதிப்பிட நான்கு அம்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குடியிருப்புப் பேட்டையின் தூய்மை, குடியிருப்புப் பேட்டை நிர்வாகம், மின்தூக்கி செயல்பாடு, சேவை மற்றும் பரமரிப்புக் கட்டணப் பாக்கியை நிர்வகித்தல் ஆகியன அந்த அம்சங்கள்.
2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் எல்லா நகர மன்றங்களும் இந்த நான்கு அம்சங்களிலும் பச்சை நிறத் தரத்தை பெற்றதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதே காலகட்டத்தில் நகரமன்றங்களின் நிர்வாக ஆட்சிமுறை மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதைக் காட்டும் வேறோர் அறிக்கை ஆண்டு இறுதியில் வெளியிடப்படும்.
2022 நிதி ஆண்டைக் காட்டிலும் நகர மன்றங்களின் செயல்பாடு முன்னேற்றம் கண்டிருப்பதை மதிப்பீடுகள் உணர்த்துவதாக தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்த நிதி ஆண்டில் இதர 16 நகர மன்றங்களும் பச்சை மதிப்பீடுகளைப் பெற்ற அதேநேரம் செங்காங் நகரமன்றம் மட்டும் ஒரு புள்ளி குறைவாக மஞ்சள் நிற தரத்தைப் பெற்றது.
நகர மன்றங்களின் தரத்தை மதிப்பிட பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மதிப்பீட்டுக்குப் பயன்படுத்தப்படும் நான்கு அம்சங்களுக்கும் அந்த நிறங்கள் பொருந்தும்.
உதாரணத்திற்கு, குடியிருப்புப் பேட்டையின் தூய்மைப் பிரிவில் பச்சை நிறத் தரத்தைப் பெற, ஒவ்வொரு புளோக்கும் நான்கிற்கும் குறைவான கவனத்திற்குரிய பிரிவுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
கறை படிந்திருந்தல், குப்பைகள், வீசப்பட்ட பொருள்கள், கிறுக்கல்கள் போன்றவை அவை. இவை ஒவ்வொன்றின் கடுமையைப் பொறுத்து மதிப்பீடு அமையும்.
கட்டணப் பாக்கியை நிர்வகிப்பது தொடர்பான அம்சத்தில் பச்சைநிற தரத்தைப் பெற, நகரமன்றத்தின் மாதாந்திர சேவை, பராமரிப்புக் கட்டண பாக்கித் தொகை மொத்தத் தொகையில் 40 விழுக்காட்டுக்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
அத்துடன், 100 குடும்பங்களில் 4க்கும் குறைவான குடும்பங்கள் மட்டும் மூன்று மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்குக் கட்டணப் பாக்கி வைத்திருக்க வேண்டும்.

