பதினாறு வயதில் சிங்கப்பூர் ஆயுதப்படையில் சேர்ந்த ஆனந்த் சத்தி குமார், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகாலச் சேவைக்குப் பின் தமது 45வது வயதில் கர்னல் பதவியிலிருந்து பிரிகேடியர் ஜெனரலாக ஜூலை 1ஆம் தேதி பதவி உயர்வு பெறவுள்ளார்.
வியாழக்கிழமை (ஜூன் 27) நடந்த தற்காப்பு அமைச்சு/ சிங்கப்பூர் ஆயுதப்படைப் பதவி உயர்வு நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் பதவி உயர்வுச் சான்றிதழை அவரிடம் வழங்கினார்.
ஆனந்த் உட்பட சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த 805 சீருடைப் பணியாளர்களும் 401 தற்காப்பு நிர்வாக அதிகாரிகளும் அரசுத்துறை அதிகாரிகளும் ஜூன் 26, 27ஆம் தேதிகளில் பதவி உயர்வுச் சான்றிதழ்களைப் பெற்றனர்.
2022 செப்டம்பரில் இருந்து மண்டாய் ஹில் முகாமில் ஆறாம் சிங்கப்பூர்ப் படைப்பிரிவு/ உணர்தல் மற்றும் தாக்குதல் தலைமையகத் தளபதியாகப் பொறுப்பு வகிக்கும் ஆனந்த், பதவி உயர்வு மனநிறைவு தருவதாகக் கூறினார். ஆனாலும், தாம் அதை எதிர்பார்த்துச் செயல்படவில்லை என்றார்.
“நான் என் மனைவியிடம் எப்பொழுதும் கூறுவேன் - பதவி தற்காலிகமானது, மனிதன்தான் நிரந்தரமானவர். எனது அணிக்கும் எனக்கும் தலைசிறந்த பணியைச் செய்தால் சிங்கப்பூர் ஆயுதப்படை வலுவடையும்; அதில்தான் என் கவனமும் உள்ளது.
“பதவி உயர்வு கிடைக்கிறதா இல்லையா என்பது ஒருவரது உழைப்பை நிர்ணயிக்கக்கூடாது,” என்றார் ஆனந்த்.
தன்னை நம்பிப் பல வாய்ப்புகளையும் பதவி உயர்வுகளையும் நல்கிய சிங்கப்பூர் ஆயுதப்படைக்கு நன்றி கூறினார் ஆனந்த். அதே சமயத்தில், தன் அணியினர், மனைவியின் தியாகங்களை இவர் மறக்கவில்லை.
“என் மனைவியே என் பக்கபலம். அவர் எப்போதும் புன்சிரிப்போடு இருப்பவர். தன் வேலை, வாழ்க்கை உட்பட எனக்காகப் பல தியாகங்களைச் செய்துள்ளார்,” என்றார் ஆனந்த்.
தொடர்புடைய செய்திகள்
இளம் வயதில் தொடங்கி, தொடர் வெற்றிகள்
வயது குறைவாக இருப்பினும், திறனிலும் அடக்கத்திலும் தன்னையே மிஞ்சும் ஆனந்த், 39 வயதிலேயே கர்னல் பதவியை எட்டினார்.
முதன்முதலில் தன் படிப்புக்கு நிதியை நாடி, பலதுறைத் தொழிற்கல்லூரி-சிங்கப்பூர் ஆயுதப்படை இணை பட்டயக்கல்வித் திட்டம்வழி சிங்கப்பூர் ஆயுதப்படையில் சேர்ந்தார் ஆனந்த்.
அப்போது சமிக்ஞைப் பிரிவு சார்ஜண்டாகப் பயிற்சியெடுத்த ஆனந்த், அதில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று பயிற்சியதிகாரிப் பள்ளிக்கு மாறினார். அதிலும் அவர் தலைசிறந்த வீரராகத் தேர்ச்சியடைந்து, சமிக்ஞைப் பிரிவு அதிகாரியாக ஆணை பெற்றார்.
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினியியல் படித்த இவர், படிப்புக்கிடையே ராணுவத்திற்குத் திரும்பிப் பயிற்சியெடுத்தார். பின்னர், மலேசியாவில் தளபத்திய, பணியாளர் கல்லூரியிலிருந்து தேர்ச்சிபெற்ற இவர், 33 வயதில் ராணுவ உளவுத்துறைக்கும் விரிவடைந்தார்.
பயிற்சி நிலையத் தளபதி, அமைப்புத் தலைவர் போன்ற முக்கியப் பதவிகளுக்குப் பின்னர் ஆறாம் படைப்பிரிவின் தளபதியாகப் பொறுப்பேற்றார் ஆனந்த்.
பிரிகேடியர் ஜெனரலாகப் புதிய அத்தியாயம்
இனி பிரிகேடியர் ஜெனரலாகத் தன் படைப்பிரிவை முக்கிய வெற்றிகளுக்கு வழிநடத்த விரும்புகிறார் ஆனந்த்.
“ஆறாவது படைப்பிரிவு தற்போது பல மாற்றங்களைக் கண்டுவருகிறது. 2020ல் ராணுவ உளவுத்துறை, பீரங்கிப் படையினரை ஒரே படைப்பிரிவில் ஒருங்கிணைத்ததால், கூடுதல் உணர்தல், தாக்குதல் ஆற்றல்களை சிங்கப்பூர் ஆயுதப்படைக்குக் கொண்டுவருகிறோம்.
“மேலும், முழுநேர தேசிய சேவையாளர்கள், முழுநேர ராணுவ வீரர்களின் தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்தவும் இது வாய்ப்பளிக்கிறது. இது நாம் போர்க்களத்தில் செயல்படும் முறைகளை மாற்றும்,” என்கிறார் ஆனந்த்.
தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுக்குத் தயாராகும் தன் மகனுக்குக் கொடுக்கும் அறிவுரையையே அன்றாடம் தன் படைப்பிரிவில் செயல்படுத்துவதாகக் கூறினார் ஆனந்த்.
“இன்று செய்ய எவ்வளவு சிரமமாக இருந்தாலும், நல்ல எதிர்காலம் வேண்டுமென்றால் இன்று உழைத்துதான் ஆகவேண்டும்,” என்கிறார் ஆனந்த்.

