ஜூன் 30 பாட்டாளிக் கட்சி மாநாடு;முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது

1 mins read
e53408ba-7b1e-45ad-aa6d-7dc40d66736f
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் மாநாடு வரும் ஜூன் 30ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டில் பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் புதிய தலைமைத்துவக் குழு தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறது.

பாட்டாளிக் கட்சியின் உட்கட்சித் தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதியே அறிவிக்கப்படும்.

இருந்தாலும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், 47, அக்கட்சியின் தலைவர் சில்வியா லிம் ஆகியோர் தற்போதைய பதவிக்கு மீண்டும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் கட்சியின் முன்னாள் தலைவர் லோ தியா கியாங் இடம்பெறுவாரா என்பது தெரியவில்லை.

தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் திரு பிரித்தம் சிங், கடந்த 2022 நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் போட்டியின்றி தேந்தெடுக்கப்பட்டார்.

2018ஆம் ஆண்டிலிருந்து அவர் கட்சித் தலைவராக இருந்து வருகிறார்.

அதே சமயத்தில் 2022 கட்சித் தேர்தலில் சில்வியா லிம்மை எதிர்த்து நீண்டகால பாட்டாளிக் கட்சியின் உறுப்பினரும் ஒரு முறை நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான டான் பின் செங் போட்டியிட்டார். ஆனால் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று சில்வியா லிம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர், 2003ஆம் ஆண்டிலிருந்து கட்சித் தலைவராக உள்ளார்.

முதலில், வாக்களிக்கும் தகுதியுள்ள தொண்டர்கள், உறுப்பினர்கள் கட்சியின் இரண்டு உயர்மட்ட தலைமைத்துவப் பொறுப்புக்கு வாக்களிப்பார்கள். பின்னர் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிர்வாகக் குழு உறுப்பினர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

குறிப்புச் சொற்கள்