வரும் மாதங்களில், என்டியுசி கிளப் வாயிலாக வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள துவாஸ் சவுத், தெருசான், பெஞ்சுரு பொழுதுபோக்கு நிலையங்களில் கூடுதல் சேவைகளை எதிர்பார்க்கலாம்.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) இம்மூன்று வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்களின் செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்கவுள்ளது. என்டியுசி கிளப், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்நிலையங்களை இயக்கும்.
இது குறித்து ஜூன் 28ஆம் தேதியன்று மனிதவள அமைச்சுக்கும் என்டியுசிக்கும் இடையே பங்காளித்துவ ஒப்பந்தம் கையெழுத்தானது.
அவ்வளவாக செலவழிக்க இயலாத வெளிநாட்டு ஊழியர்களைப் பொழுதுபோக்கு நிலையங்களுக்கு வர ஊக்குவிக்கும் நோக்கில் மனிதவள அமைச்சு அம்மூன்று நிலையங்களின் செயல்பாடுகளுக்காக என்டியுசிக்கு ஒரு மானியத்தை வழங்கவுள்ளது.
இம்மானியத்தைப் பெற, என்டியுசி அந்நிலையங்களில் ஆண்டுதோறும் கொவிட்-19க்கு முன்பிருந்த ஆள் நடமாட்டத்தை எட்ட அல்லது தாண்ட வேண்டும். என்டியுசியின் நிர்வாகச் செயல்முறைகளை மனிதவள அமைச்சு மேற்பார்வையிடும்.
என்டியுசி கிளப் அந்நிலையங்களில் வழங்கவுள்ள சேவைகளில், என்டியுசி கற்றல் மையத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், தன்னார்வக் குழு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு வசதிகள், அறநிறுவன நிகழ்ச்சிகள் போன்றவை அடங்கும். வெளிநாட்டு ஊழியர் நிலையத் தூதர் கட்டமைப்பு வாயிலாகக் கூடுதல் ஊழியர்களைச் சென்றடைய முயற்சிகளும் இடம்பெறும்.
ஏற்கெனவே என்டியுசி சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்துடன் தொடங்கிய வெளிநாட்டு ஊழியர் நிலையம், 2018 முதல் சூன் லீ பொழுதுபோக்கு நிலையத்தை இயக்கிவந்துள்ளது. இதனால், அதே பகுதியில் இருக்கும் இந்த மற்ற மூன்று நிலையங்களையும் என்டியுசி மேலும் சுலபமாக இயக்கும்.
மேலும், வெளிநாட்டு ஊழியர்களுக்கான குடியேற்றத் திட்டம் (எஸ்ஐபி) போன்றவற்றைச் செயல்படுத்துவதால் என்டியுசிக்கு வெளிநாட்டு ஊழியர் விஷயங்களில் நல்ல அனுபவமும் புரிந்துணர்வும் இருப்பதாக மனிதவள அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
“ஒவ்வோர் ஊழியரும் முக்கியம் என்ற கருத்தோடு என்டியுசி, வெளிநாட்டு ஊழியர்களின் தேவைகளுக்கும் நலனுக்கும் குரல்கொடுத்துவந்துள்ளது. ஒரு நாள் கடின உழைப்பிற்குப் பிறகு ஊழியர்களுக்கான வசதிகளை ஏற்புடைய விலையில் வழங்க விரும்புகிறோம்,” என்றார் என்டியுசி துணைத் தலைமைச் செயலாளர் சாம் ஹுவி ஃபோங்.
என்டியுசியைத் தாண்டியும் தம் பொழுதுபோக்கு நிலையங்களை இயக்க மனிதவள அமைச்சு ஒருமித்தக் கருத்துகொண்ட பங்காளிகளைத் தொடர்ந்து தேடிவருகிறது.
மேலும், மனிதவள அமைச்சு தொடர்ந்து பழைய பொழுதுபோக்கு நிலையங்களைப் புதுப்பிக்கும். உதாரணத்திற்கு, 2025ல் பெஞ்சுரு நிலையம் மூடாமலேயே புதுப்பிப்புப் பணிகள் தொடங்கும். பயிற்சி வகுப்புகளும் நிகழ்ச்சிகளும் நிகழக்கூடிய நிர்வாகக் கட்டடம், மது அருந்தப் புதிய திறந்தவெளித் தோட்டம், புதிய நுழைவாயில் போன்றவை அந்நிலையத்தில் இணைக்கப்படும்.
அரசாங்க வசதிகளோடு மேலும் பெரிய, வசதியான பொழுதுபோக்கு நிலையங்களை அமைப்பது போன்ற புத்தாக்க யோசனைகளை மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
தற்போதுள்ள ஒன்பது வெளிநாட்டு ஊழியர் நிலையங்களில் ஆறு நிலையங்களை மனிதவள அமைச்சு செயல்படுத்திவருகிறது. மற்ற மூன்றில் இரண்டு (காக்கி புக்கிட், உட்லண்ட்ஸ்), தனியார் நிறுவனங்களாலும் ஒன்று (சூன் லீ), வெளிநாட்டு ஊழியர் நிலையத்தாலும் இயக்கப்படுகிறது.

